நத்தைகள் ஊர்வதை நான் என்றும் வெறுக்கப்போவதில்லை

கால்களற்ற துயரவெளியில்
சக்கரங்களாக
உருளும் தேகத்தின்
கீறல்களிலிருந்து
வடிந்துகொண்டிருக்கிற
பிசுபிசுப்பு
போர்க்கால ஆக்கினைகளை
இன்னமும் தெளித்துச் செல்கின்றது

அவர்களாகப்பட்டவர்கள்
நத்தையின் பிள்ளைகள்!!

நத்தையின் பிள்ளைகளுக்கு
முன்பொருகாலத்தில்
மகிழ்சிபற்றித் தெரிந்திருந்தது
கால்கள் எனப்படும்
மலர்ந்த காலையில்
கத்திரிக்கப்படாத ஆசை வெளியில்
அவர்களும் நடந்தனர்

தரைநெடுங்கும்
பிசுபிசுப்பை ஏற்படுத்திவிடுகிற
நத்தைகள்
உண்டாக்குகிற அருவருப்பை
விற்பனைக்காக
அதரங்களில் வீணி பருகுபவர்களை
பார்க்கிற கணங்கள்
மறைத்துவிடுகிறது

எந்தத் திசையில்
ஆக்ரோபஸ்(octopus) நகர்கிறது
எதற்காக மை பீச்சிய
தேசத்தில் ஒழிகின்றது..?

எல்லா இடத்திலும்
பிசுபிசுத்தல் ஒரு
தடமாகப் பதிகிறது..!

உரிதல்…
கழிதல்…
கசங்கல்…
அழிதல்…
எத்தனை பெரிய சாபம்!!

ஹீரோசிமாவிலிருந்தும்…
முள்ளிவாய்க்காலிலிருந்தும்…
கம்பாலாவிலிருந்தும்…
யூதத் தெருக்களிலிருந்தும்
தவழ்ந்துவந்த
சுக்கிலங்கள்
ஒரு நத்தைபோலவே நடந்தன….

நத்தைகளுக்கு உணர்கொம்புகள்
நீண்டிருந்தமை
சில காலங்களில்
புறக்கணிக்கப்பட்டது

என்றுமே உடல் நிமிர்த்தக்கூடாது
என சட்டதிட்டங்கள்
வகுக்கப்பட்ட சூன்யத்தில்
எப்படி..
வாழ்வாதாரமற்ற வலி அணையும்..?

குட்டி நத்தைகளை
பற்றி கவலையில்லாதவர்கள்
நத்தைகளின் தலைகளில்
பகிடிகளை எழுதிவைக்கட்டும்

நான்
நத்தைகளை நேசிக்கிறேன்
ஏனெனில்
அங்குதான்
இன்னமும் செலவழிக்கப்படாத
ஜீவிதத்தின் நேசம்
மீதமிருக்கிறது

– அனாதியன்-