பொங்கல் திருநாள்

தமிழர்தம் திருநாளாய்
தரணியிலே மலர்ந்துவரும்
பொங்கல் திருநாளே
பூந்தமிழர் புத்தாண்டு !

அறுவடையின் பின்வரும்
பொங்கல்ப் பெருநாளில்
புத்தாடை புனைந்து
பொலிவுறத் தோன்றும் மக்கள் !

தமிழர்தம் பண்டிகையைப்
பரணி பாடிய
பண்டைத் தமிழர் பாரெங்கும்
கொண்டாடி மகிழ்ந்தனர் .

புதுப்பானை கையெடுத்துப்
புத்தரிசி அதிலிட்டு
சர்க்கரை பாலோடு
நெய்யும் கலந்துவிட்டால்
தித்திக்கும் பொங்கல்
திசையெங்கும் மணங்கமழும் .

பயிர்வளர வயற்காட்டில்
பகலெல்லாம் வியர்வைசிந்தி
உழுது பயனளித்த
உழவர் தம்மை போற்றி
உவகையுறும் உலகத் தமிழர் !

உழவுத் தொழிலுக்கு
உறுதுணையான எருதுகளுக்கும்
பொங்கலின் மறுநாள்
பட்டிப் பொங்கலிட்டு
நன்றிதனை நவின்றிடும்
நந்தமிழர் மாண்பு . . . .

உழைப்பவர் உயர்வடைய
உழவர் தலைமிர
உதவிநின்ற உதய சூரியனுக்கு
பொங்கிவரும் பொங்கலைப்
பொலிவுறப் படையல் . . . .

மஞ்சள் , இஞ்சி , கரும்பு
மணங்கமழ் பூக்கள்
முக்கனி , மாதுளை முத்துக்கள்
அத்தனையும் ஆதவனுக்குப் படையல் . . . .

மாவிலைத் தோரணம் கட்டி
மனையதன் முற்றத்திலே
கதிரவன் கதிரொளி பாய்ச்ச
மண்பானையில்ப் பொங்கலிட்டு
மகிழ்ந்திருந்தோம் அந்நாளில் !

நான்கு சுவர்களுக்குள்
மின்சார அடுப்பினிலே ,
கதிரவன் துயிலும் பொழுதான
கடுங்குளிர் காலத்திலே ,
அந்நிய தேசங்களில்
அகங்குளிரப் பொங்குகின்றோம் . . . .

பொங்கல் பொங்கி வழிய
புன்னகை இதழோரம் மலர
சுற்றம் சூழ்ந்திருக்க
சுகித்திருந்த காலங்கள்
மனமெனும் தரையிலே
அழியாத கோலங்கள் .

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

இரா . சம்பந்தன் – ஜேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert