யார்க்கெடுத்துரைப்பேன்.


வரவின் ஓசை
ஒலிக்கவில்லை.
வாழ்க்கை ஏனோ
ரசிக்கவில்லை.
தனிமை எனக்கும்
பிடிக்கவில்லை.
பேசும் முகங்களை
காணவில்லை..
அலை பேசி
ஓசை ஓயவில்லை.
எடுத்து பேசிட
மனமுமில்லை.
இறப்பின் செய்தி
குறையவில்லை.
தொலைக் காட்சியும்
பார்க்க பிடிப்பதில்லை.
உறவுகள் யாரும்
அழைக்கவில்லை.
யார் யார் இருக்கினமோ
தெரியவில்லை.
அணைத்துக் கொள்ள
யாரும் பக்கமில்லை.
அச்சம் அவர்களையும்
விட்ட பாடுமில்லை.
தொட்டால் குற்றம்
பட்டால் குற்றம் அந்த
பதட்டம் இன்னும்
தணியவில்லை..
ஏவுகணைகளால்
ஏதுமில்லை
அணு ஆயுதங்களால்
பயனுமில்லை..
ஆலயங்களும் இன்னும்
திறக்கவில்லை.
தோடுடைய செவியனும்
தோன்றவில்லை..
பதிகம் பாடியும்
பலனுமில்லை
பாலை ஊற்றியும்
பார்வையில்லை.
விதியை நோவதா
வீதி தடையை பார்ப்பதா
பசித்த வயிறுகளின்
பசியை போக்குவது யார்?
வையத்தின் வதை நிலை
மாற்றம் காணுமா
பாரெங்கும் வைரசின்
ஆட்டம் அடங்குமா..?
உலக வரை படம்
எங்கனும் காெரோணாவின்
ஆட்சி யாரிடம் செல்வோம்
யார்க்கெடுத்துரைப்போம்..?

ஆக்கம் கவிஞர் ரீ தயாநிதி