எனது மண்

முற்றத்து பலாக்கனிகள்
முகம் மலர்ந்து வரவேற்க
செம்பட்டான் மாங்கனிகள்;
அசைந்தசைந்து தலையாட்ட
தொங்கும் துலாவுக்கு
முள்முருங்கை தோள்கொடுக்க
தோடை எலுமிச்சை
கிணற்றடியில் சுற்றி நிற்க
வுhழைகள் கூடிநின்று
வும்சத்தை நினைவு சொல்ல
வுhசலில் தென்னைமரம்
வுhவென்று எனை அழைக்க
மந்திகள் கூட்டமாக
மாமரத்தில் விளையாட
கொம்புத் தேனீக்கள்
கூட்டமாய் அதைக் கலைக்க
கொய்யாவும் மாதுளையும்
குலுங்கிக் கூத்தாட
உழுந்தும் பயறும்
வயலெங்கும் படர்ந்து நிற்க
நெல்மூடை வாசலிலே
விருந்தினரை வரவேற்க
மாலைக் கதிரொளிகள்
மரக்கொப்பு ஊடா ஊடுருவ
கொத்திப் புரட்டிய
கோடரி மண்வெட்டி
கொல்லைப் புறத்தங்கே
தோள்சாய்த்து ஓய்வெடுக்க
நானும் அமைதியாய்
என் குடிலில் தலைசாய்க்க
சாமத்தில் கோழிகள்
சத்தமிட்டு எனை எழுப்ப
நான் எழுந்து போகையிலே
மரநாய்கள் ஓட்டமிட
போன திசைப் பக்கம்
கறையான் புற்று உயர்ந்து நிற்க
பக்கத்தில் சாரதா கோவில்
பக்தியருள் சுரக்கும் அங்கே
இத்தனையும் தந்த மண்
இருண்டபடி கிடக்குதங்கே
என் மனமோ ஏங்குகிறது
எனது மண்ணை எண்ணி எண்ணி
– கிளிஅக்கா –