வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா(16-05-2018)

நேற்று முன்தினம் சனிக்கிழமை (16-05-2018) மாலை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்ற வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வில் பார்வையாளர் தரப்பில் இருந்து சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
நிகழ்வின் நிகழ்ச்சி நிரலுக்கப்பால் பார்வையாளர்களும் பிரதியை முன் வைத்து தம் கருத்துக்களை கூறினார் கள். அதில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் என்னைக் கவர்ந்தது.
தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தனின் „அக்கினிபிரவேஷம் “ என்ற சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்த போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போன்றதொரு சிறுகதையே பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான “ வரம் “ சிறுகதை.
அகலிகையை மீள் வாசிப்புக்குட்படுத்துகையில் அவள் இறுதியாக கேட்கும் வரம்.
„நாதா நீங்கள் ஒருமுறை இந்திரன் வேடம் கொண்டு என்னோடு வந்து சுகித்திருக்க வேண்டும்.“ என்ற இறுதி வரிகள்
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அவளது ஆசாபாசங்களை மதியாத கெளதம முனியிடம் அவள் கேட்ட வரம் ஏன் இன்னும் எங்கள் பெண்ணிய வாதிகளை அசைக்கவில்லை. அகலிகையில் ஏற்பட்ட அந்த தீப்பொறி ஏன் இன்னும் பற்றவில்லை.
„ஓர்மம்“ சிறுகதையில் ஊர்மிளையின் மன அவசங்களை ஒரு பெண்ணின் எழுத்துக்களுக்கு அப்பால் சென்று ஓர் ஆண் வடித்திருப்பதும் இலக்குவணனால் கவனிக்கப்படாத அவள் உள்ளத்து உணர்வுகளையும் அவளது விரக தாபத்தையும் அந்த தாபமே அவளை ஓர்மம் கொள்ள வைத்து காமத்தை ஜெயித்து ஞானத்தை அடையும் பக்குவ நிலைக்கு அவள் வருவதும் இன்னும் ஏன் பெண்ணியலாளர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
வாசிப்பின் மந்த நிலை விகசித்து தீப் பொறி எழ வேண்டும்.அதன் ஒரு பொறியை இங்கு பற்ற வைப்போம்.
என்ற வகையினதான ஆரோக்கியமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
ஆரோக்கியமான கருத்துரை ஆற்றிய எழுத்தாளர் சி.ரமேஷ் தனதுரையில் ராவணாபுரி சிறுகதையில் சூர்ப்பனகை என்ற கொடிய பெண் பாத்திரம் சொர்ண நகையாக என்ற பெயரில் அழகிய இளம் பெண்ணாக படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.