அனாதைகண்டகாட்சி!ஜெசுதா யோ

சதா துப்பாக்கி ஓசை கேட்டு
சற்று இடைவெளி விட்ட தருணம்,
எங்கிருந்தோ ஓர் குழந்தையின்
அழுகுரல் கேட்டு சற்று பார்வையை திருப்பினேன்,……
அங்கே நான் கண்ட காட்சி ..!

காய்கறித் துண்டுகளாய்
சிதறிய மனிததேகங்கள்..
கையொரு பக்கம் காலொரு பக்கம்
கண்கள் நான்கைந்து குவியலாய்
ஈக்கள் மொய்த்தபடி
இடையிடையே சிகப்பாய்
என்ன அது …
ஆ …
நரம்புகளுக்கிடையே ஓடும் ரத்தம் அங்கே
கணக்கற்று விழலுக்கிறைத்த நீர் போல்
சில இடங்களில் குட்டை போல் தேங்கியும்
சென்ற இடமெல்லாம்
கால்களில் இரத்தமும்;
சதைத் துண்டுகளும் ஓட்டி
என் உடலோடு சேர்ந்து
உயிரும் அதிரும் வண்ணம்
என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது.. ..
சின்னஞ் சிறுவர்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மலராத மலர்கள் அங்கே உதிர்ந்து போய் ..
அங்கேதான் அந்தக் குழந்தை
அழுது கொண்டிருந்தது.,,..

அங்கே ஓர் உடலும் கிடக்கக் கண்டேன்
முகம் முழுக்கப் புன்னகையோடு
அவளது கரங்கள் அந்தக் குழந்தையை அரவணைத்த படி..
வெட்டுண்ட மரமாய் வீழ்ந்து கிடந்தது,
அந்தக் குழந்தையோ பசித்து
அவள் மார்பை தேடித் துழவுகிறது …
அங்கே அது இருந்தால்தானே …?

பால் புகட்டிய மார்பிருந்த இடத்தில் …
வட்டமாய் ஓர் துளை மட்டுமே..
ஏதோ ஒன்று அவளைத் துளைத்து
அப்புறம் சென்றிருக்கிறது …
இறந்து விட்ட அன்னையின் அருகினில்
அக்குழந்தை அதை அறியாமல்
பசித்து பாலுக்காய் அழுது கொண்டிருக்கிறது …

இழந்து விட்ட என் தேசத்தின்
சுதந்திரந்தை எண்ணி
நானும் கலங்கி நிற்கிறேன்
அனாதையான உணர்வோடு ……*“

ஆக்கம் ஜெசுதா யோ