அன்புள்ள பூங்கொடிக்கு!கவிதை கவித்தென்றல் ஏரூர்

நீ மனம் திறந்தெழுதி மடல் கிடைத்தில் நெகிழ்ச்சி
உன் நலமறிந்ததில் எந்தன் மனம் மகிழ்ச்சி
நீ எழுதிய முத்தக் காகிதத்தை என் விழிகள் ஒற்றியெடுத்தது
உனைப்பற்றிய சிந்தனை எனை வாட்டியெடுத்தது

விழிகளில் சேகரித்த உன் விம்பம்
விடியலில் ஒளியென என்னில் உதிக்கிறது
கனவினில் உன் கால் கொலுசொலி காதில் இனிக்கிறது
இராப்பொழுதினை கடப்பது கடினமாக இருக்கிறது
உன்னுறவில் கலப்பதற்கு மனம் துடியாய் துடிக்கிறது

மஞ்சம் காணும் ஆசை மனசுக்குள்ள
மகவை வேணும் கொஞ்சிக் கொள்ள
மணநாள் ஆக இன்னும் தோது இல்ல
மனதால் வாழ்கிறேன் என்ன சொல்ல

தாவணி போட்ட தங்கை வீட்டிலிருக்கு
தங்கைக்கு கட்டிய வீடு பாதியில் இருக்கு
ஆவணி வரைக்கும் பொருத்திரு கொஞ்சம்
ஆசைகளெல்லாம் வெறுத்திரு தங்கம்

என் தாகம் தீர்க்க நீதான் வேணும்
உன்னை தாரமாக்க எண்ணி நாளும்
தலைப்பாரம் இறக்கி வைத்து நானும்
தாலியோட வாறேன் நீ வந்து சேரும்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்