ஈழத்தின் யாழ்.பருத்தித்துறையில் நடந்தேறிய ‚உண்மைக்கும் உண்டு அடைக்கும் தாழ்‘ நாவல் அறிமுக நிகழ்வு.

ஜேர்மனி வாழ் பெண் படைப்பாளி குளோரியானா செல்வநாதன் ஆங்கிலத்தில் அநேக படைப்புகளை வெளிக்கொணர்ந்தவர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புக்களை செய்து இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் படைப்பினை ஆவணம் செய்தவர். இவரது ‚உண்மைக்கும் உண்டு அடைக்கும் தாழ்‘ நாவலின் அறிமுக விழாவானது 06.08.2018 திங்கட்கிழமை மாலை 04.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள ஞானசம்மந்தர் கலைமன்ற அரங்கில் ஆரம்பமானது. நிகழ்வினை ஞானசம்மந்தர் கலைமன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஞானசம்மந்தர் கலைமன்றத் தலைவர் மருத்துவர் செ.சுந்தரமூர்த்தி நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்மொழி வாழ்த்து, மன்றக்கீதம் ஆகியவற்றை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை உயர்தர வகுப்பு மாணவியும் மன்றத்தின் மாணவியுமான மதிநிலா மதியழகன் இசைத்தார். வரவேற்புரையினை ஓய்வுபெற்ற அரச அதிகாரியும் மன்ற உறுப்பினருமான க. இராசரத்தினம் வழங்கினார். வாழ்த்துரைகளை மன்ற உறுப்பினர் செல்வமலர் சுந்தரேசன், யோ.புரட்சி ஆகியோர் வழங்கினர்.

நூலினை நூலாசிரியர் குளோரியானா செல்வநாதன் வெளியிட முதற்பிரதியை ஞானசம்மந்தர் கலைமன்ற உபதலைவர் க.பாலசுப்பிரமணியம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.

நூலின் நயப்புரையினை ஆசிரியரும் பன்முக எழுத்தாளருமான கலாநிதி சு.குணேஸ்வரன் ஆற்றினார். ஏற்புரையினை நூலாசிரியர் வழங்கினார். நன்றியுரையினை ஞானசம்மந்தர் கலைமன்ற கலைவகுப்பு முகாமையாளர் வாணிஸ்ரீ வழங்கினார்.

இந்நாவலை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் விருதிற்கு தேர்ந்தெடுத்தமை குறிப்பிடத்தக்கது.