என் தாய்த்தேசமே….கவிதை.ரதிமோகன்

செந்தாமரையொத்த வதனங்களும்
செவ்வரி படர்ந்த வேல்விழிகளில்
பாய்ந்து வரும் ஏவுகணைகளாய்
மறவரைகூட சாய்த்து விடும் ஈழத்து
மங்கையர் அழகும்..

கொவ்வைப்பழ செவ்விதழ்களிலே
செந்தமிழின் சுவையும் கண்டு
அஞ்சா நெஞ்சம் கொண்ட
வஞ்சியர்களின் கை சுமந்த
வீரவரலாறு கொண்ட நம் தேசம்…

இத்தரையின் செழிப்பும் எழிலும்
மாற்றாரை வசீகரித்துச்செல்லும்
பத்தரைமாற்றுத்தங்க பெண்டீர்
அந்தகாரம் சூழ் பொழுதுகளில்
அச்சமின்றி நடந்து சென்ற
கொற்றவை அரசாண்ட நம் தேசம்…

கற்பகதரு விருட்சங்களும்
கற்சிலை சிற்பங்களும்
காட்சிக்கும் சாட்சிக்குமாய்
மண்பெருமை சொல்லி நிற்கும்
கடலலைகள் மேலெழுந்து
நிலத்தழகை வீராப்பாய்
பண்ணிசைத்துச்செல்லும்…

கொட்டும் அருவியாய் சிரிப்பொலிகள்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
கட்டிக்காத்த நம் பாரம்பரியம்
கொட்டிய போர் மழைக்குள்ளே
கரைந்து மறைந்து போனதென்ன..

மின்னலும் இடியும் மோதியே
மேகமூட்டமாகிய விழிகள்
உப்பளத்தின் சுவையை ருசிக்க
உதிரத்தில் மிதந்த தாய்த்தேசத்து
உறங்காத நினைவுகள் தாகத்தோடு
உயிர்ப்பூவெடுத்து போவதென்ன…,

ஆக்கம் ரதிமோகன்

Merken