ஒரு பதில் கிடைக்குமா..???


பட்டங்கள் பதவிகள் இருந்தும்
பகலிலும் இருட்டாகிப்போன பல
பெண்களின் வாழ்க்கைப்பக்கங்கள்
புரட்டப்படுமா..?
கலாச்சாரத்தின் பெயரில் அடிமைகளாய்
காலகாலமாய் பூட்டப்பட்டிருக்கும்
திறக்கப்பட முடியாத கதவுகள்
திறக்கப்படுமா..?
காதலென்ற விலங்குகள் மாட்டி
கலியாணசந்தையில் பேரம் பேசும்
கலியுகத்து வியாபாரம்
கலையப்படுமா..?
தினம் தினம் துகிலுரியப்பட்டு
முனகும் பெண்மையின் வலியின் ஒலி
முச்சந்திவரை கேட்டும்
மௌனிக்கும் எம் உதடுகள் திறக்குமா.?
பச்சைக்குழந்தையின் பிறந்தமேனிகூட
இச்சைதீர்க்கும் விளையாட்டுத்தளம்
இந்நிலை மாறுமா கொடியவர்தலை
ஈவிரக்கமின்றி கொய்யப்படுமா..?
எட்டயப்புரத்தான் கனவோடு
எழுந்த பெண்களின் குரல்வளைகள்
ஏதோ ஒரு மூலையில் ஓசையின்றி
நசுக்கப்படுவது தடுக்கப்படுமா..?
உரத்த எம்குரல்கள் உரிமைக்கான
உறுதிமொழி எடுக்காதவரை
உத்தரவாதம் இல்லை பாதுகாப்பிற்கு
உண்மை இந்த உண்மை
உணரப்படுமா..!??
என் கேள்விக்கு பதில் வருமா..?

அன்போடு ரதிமோகன்