கனவு பல சுமந்து!

விதி வரைந்த பாவி நான்
விசும்புகின்றேன் தினமும் தான்
கனவு பல சுமந்தாலும்
கண்களிலே கண்ணீர் தான்

எள்ளளவும் என் அகத்தில்
குறை ஏதும் வைக்கவில்லை
பெற்றவர்கள் வளர்ப்பினிலே
புடமிட்ட தங்கம் நான்

பத்தினியாய் நான் இருந்தும்
பயன் என்ன சொல்வீரோ
பணம் என்னும் பேய் முன்னே
குணம் எல்லாம் குப்பையாமே

புத்தம் புது சந்தையிலே
புது மாப்பிள்ளை ஏறுவிலை
தினக்கூலி நாமெல்லாம்
திருமணத்தைத் தேடலாமோ

தாலி என்னும் வரத்திற்காய்
ஏங்குகின்ற கன்னி நான்
வேலியினுள் வளர்ந்ததனால்
விசும்புகின்றேன் தினமும் தான்

வன்னியூர் இனியவள்