கைதியாக்கப்பட்டவள்..!!கவிதை அனாதியன்

 

சிங்காரமாய்
சுருங்காத தோலில் மின்னுகிற
நிறப்பூச்சுக்களில்
சோகத்தின் பெருந்தீ
மறைக்கப்பட்டிருக்கும்
ஒரு புன்னகையில்
உதடுகளின் சாயமன்றி
உதட்டுப்புண்கள் தெரிவதில்லை
உப்பி நிற்கும் மார்பினுள்ளே
உடைந்த இதயம் இருப்பது
அறியப்படுவதேயில்லை

கைதியாக்கப்பட்டவள்;
குழந்தை முலைவிட்டகலும்வரையிலும்…
அந்த மூன்றுநாள் வலிப்பொழுதின்
தனிமையிலும்….
பிரசவத்தின் ரணம்மிகு
காலங்களிலும்…
சமையலறையிலும்…
விருப்பமற்ற சதை
பரிமாற்றங்களிலும்…..
வெளியில் செல்லும்போது
யாரும் காவலாய் வரும்பொழுதும்….
கழிப்பறையற்ற
பொது வெளிகளிலும்….
கட்டுண்டுகிடந்தாலும்
ஏதோவொரு நம்பிக்கையில்
யார்மீதோவான
அதீத பற்றுதலில்
யாருக்காகவோ
அவள் மீண்டும் எழுந்து நடக்கிறாள்

அவள் வலியிலும் சிரிக்கிறாள்
அவள் வலிப்பட்டு இன்பமளிக்கிறாள்
சதையை துளையிட்டு மகிழ
சம்மதிக்கிறாள்
கைதியாக்கப்பட்டவள்..!!
கடைசிவரை
நிம்மதியாய் ஒரு புன்னகையை..,
ஆசைப்பட்டதுபோல
ஒரு அரவணைப்பை..,
தனியே எதையோ ஒன்றை
நிகழ்த்தும் சுதந்திரத்தை..,
பெறமுடியாமலே போகிறாள்

கைதியாக்கப்பட்டவள்…!!

அனாதியன்