சிறுகதை. எழுத்துவேலை. – இந்துமகேஷ்

அதென்ன பெரிய வேலையே?!
சும்மா ஒரு கொஞ்சநேரம் சோம்பலா ஒரு பக்கத்திலை குந்திக்கொண்டு… வீட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு அல்லது வீதியைப் பார்த்துக்கொண்டு நாடியிலை அல்லது கன்னத்திலை கைவைச்சுக் கொண்டு ஆரைப்பற்றியாவது அல்லது எதைப் பற்றியாவது மண்டைக்குள்ளை போட்டுக்
குழப்பிக்கொண்டிருந்தால் கொஞ்ச நேரத்திலை ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை அல்லது ஒரு கவிதை!
அது எல்லாரும் செய்யக்கூடிய வேலைதான்.

எனக்குமட்டும் ஏலாதா என்ன?
நானும் வந்து பத்துவருசமாச்சுது. என்னட்டை எவ்வளவு விசயங்கள் இருக்கும்?
எண்டாலும் எனக்கு இதுகளிலை அவ்வளவாய் ஈடுபாடு கிடையாது. ஆனால் சிகரட்டு மாதிரி அடிக்கடி
கிடைக்கிற நேரமெல்லாம் படம் பார்க்கவேணும்.
அதையும்விட்டால் என்ன ஒரு பொழுதுபோக்கு?

சும்மா நெடுக வேலை வேலை எண்டு அடிச்சுக் குடுத்திட்டு வந்தால் ஒரு மாற்றம் வேணும் எண்டதுக்காகத்தான் படம் பார்க்கிறது.
மற்றப்படி இந்தக் கதை கவிதை கட்டுரை எண்டு இதுகள் எனக்கு அவ்வளவாய் ஒத்துவாறேல்லை.

உருப்படியாய் ஒருவேலையும் செய்யத் தெரியாதவை கனபேர் இங்கை கதை எழுதுகினம்.
ரெண்டு வருசத்துக்கு முந்தி வந்த சின்னச் சின்னப் பெடியங்கள் எத்தினைபேர் நாய்பூனைக் கொம்பனியளிலை வேலையும் பென்ஸ்கார்களும் எண்டு எவ்வளவு வடிவாய்த் திரியிறாங்கள். அவங்களைப் பார்த்தாவது புத்திவர வேணாமே!

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருக்கிறார் எங்கடை „ஸ்ரட்“டுக்குள்ளை..
அவரோடைதான் நான் கொஞ்சக்காலம் பழகினனான். மற்றும்படி எங்கடை ஆட்களை அவ்வளவுதூரம்
எனக்குப் பிடிக்கிறேல்லை. எவ்வளவு திறமான ஆட்கள் எண்டு நீங்கள் பழகினாலும் ஒருநாளைக்கு
அவையள் தங்களின்ரை விளையாட்டைக் காட்டிப் போடுவினம். அதாலை அதிகமாய் நான் ஒதுங்கிப்
போயிருகிறது.
ஆனால் இந்த எழுத்தாளர்மட்டும் கொஞ்சம் வித்தியாசம். ஆரோடையும் நல்லாச் சிரிச்சுக் கதைக்கிற மனிசன்.
ஆனால் அந்தாளிட்டை எனக்குப் பிடிக்காத ஒரு விசயம்-
எப்ப பார்த்தாலும் பேப்பரும் பேனையும்.
என்னத்தை எழுதி… என்னத்தைக் கிழிச்சு…?
இப்பிடிக் கதை எழுதிறநேரத்திலை எங்கையேனும் போய்க் கூட்டிக் கழிச்சாலாவது கையிலை கொஞ்சக்
காசு புரளும். அந்தாளுக்கு அந்தச் சிந்தனையே இல்லை.
பெண்சாதி பிள்ளையள் ஊரிலை கஷ்டப்படுகுதுகளோ என்னவோ.. இங்கை இந்தாள் சும்மா எழுதிக்கொண்டு
திரியுது!

சில நேரங்களிலை என்ரை வாழ்க்கையும் எனக்கு விசர்த்தனமாய்த் தெரியும்.
விடிஞ்சாப் பொழுதுபட்டா செக்குமாடுகள்மாதிரி சுத்திச் சுத்தி ஒரே ஓட்டம்தான்.
வீடு…வேலை! வீடு… வேலை!
வேலை முடிஞ்சு வீட்டை வந்தால் வீட்டிலை என்னவேலை?
நித்திரை கொள்ளுறதுதான்.
விடிஞ்சு எழும்பி பஸ்ஸைப் பிடிச்சுக்கொண்டு ஓடினால் ஒண்டரை மணித்தியாலத்திலை வேலை
செய்யிற இடம் வந்திடும். அங்கை நிண்டு மாரடிச்சிட்டு இடையிலை வாற அஞ்சு பத்து நிமிச
ஓய்வுக்கிடையிலை இரண்டொரு சிகரட்டை ஊதி ஒண்டிரண்டு கோப்பியைக் குடிச்சிட்டு பிறகு
தொடர்ந்து முறிஞ்சிட்டு பின்னேரம் வீட்டை வந்தால்-
அடிச்சுப் போட்ட பாம்புமாதிரி உடம்பு சுருண்டுபோம்.

வந்தகாலத்திலை துவங்கின வேலை இன்னும் முடிஞ்சபாடில்லை.
உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போனதுதான் மிச்சம்.
(வெளிப்பார்வைக்கு நான் வாட்டசாட்டம்தான் ஆனால் ஓடாய்ப்போனதெண்ட உதாரணம் உடம்புக்குள்ளை
இருக்கிற களைப்புக்கு)
உடம்புக்கு ஏலாதெண்டு சும்மா வீட்டிலை கிடக்கேலுமே?
வீட்டுவாடகை, கரண்ட் பில், தண்ணி பில், டெலிபோன் பில் எண்டெல்லாம் எத்தினை தேவையள்?

ஒருநாளைக்கு வேலைக்குப் போகாட்டில் துலைஞ்சம்.
சரி இப்பிடி உழைச்சுத்தான் என்னத்தைக் கண்டமெண்டால் ஒண்டுமில்லை.
வாழ்க்கையிலை ஒரு சந்தோஷமும் இல்லை.
சந்தோஷம் எண்டு என்னத்தைச் சொல்லுறது? ஒண்டிலை சந்தோஷம் எண்டு தொடங்கினால் சந்தோஷம்
வேறை ஒண்டிலை இருக்கிறமாதிரித் தெரியுது.
ஊரைவிட்டு ஓடிவரேக்கை ஓடித் தப்பினால் காணுமெண்டுமட்டும்தான் மனசிலை பட்டுது. இங்கை வந்து
காம்ப்பிலை காயேக்கை ஊரிலையே இருந்திருந்தால் சந்தோஷமாய்ச் செத்திருக்கலாம் எண்டதுமாதிரி
இருந்துது.

பிறகு ஒருமாதிரி நிமிரத்தொடங்க…
ஆசையள்…!
அப்பிடி இருக்கவேணும் இப்பிடி இருக்கவேணும் எண்டு மனம் அலைஞ்சுது. தனிய இருக்கிறபோது கலியாணம் முடிச்ச ஆக்களெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறமாதிரித் தெரிஞ்சுது.
கலியாணம் முடிச்ச பிறகு தனிய இருக்கிற ஆக்களெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறமாதிரித் தெரியுது.

எனக்குக் கலியாணமாகி மூண்டு வரியத்திலை நாலு பிள்ளையள்.( ஒருக்கால் ரெட்டையாப் பிறந்ததாலை நாலு)
இப்ப எல்லாம் கேளாக் கேள்வி கேக்குதுகள்.
திருஞானசம்பந்தர் மூண்டுவயசிலை தேவாரம் பாடினதெண்டால் நம்ப மறுத்த கனபேர் இருக்கினம்.
என்ரை வீட்டை வந்து பார்த்தால் ரெண்டுவயசிலை இதுகள் கேட்கிற கேள்வியளுக்கு அவையள் பதில்
சொல்லேலாது.

பிறந்த நாலிலை ஆம்பிளைப் பிள்ளையள் கிடையாது.
வெளிநாட்டுக்கு வந்து ஊர் விசயங்கள் கனக்க விட்டிட்டம். -சீதனத்தைத் தவிர.
இப்ப எனக்கு நாப்பது தாண்டிவிட்டுது.. என்ரை அறுவதிலை என்ரை பெட்டையள் குமரியளா நிக்குங்கள்.
அப்ப சீதனம் ஞாயமாத் தேவைப்படும்.
அதுக்கும் இப்பவே சேர்த்து வைச்சாத்தான் நல்லதெண்டது என்ரை மனிசியின்ரை ஓடர்!
மனைவி சொல்லே மந்திரம்.
எப்பிடியும் பெஞ்சன் எடுக்கமுதல் பிள்ளையளுக்கு ஏதேனும் சேர்த்து வைக்கவேணும். கடமையை
விட்டிரப்படாது.

எங்களுக்கு முந்தின தலைமுறையிலை எல்லோரும் ஏதேனும் ஒரு ஒழுங்குமுறையிலை வாழப் பழகிச்சினம்.
இப்ப ஒரு ஒழுங்கு கிடையாது.
இதிலும் வெளிநாட்டு வாழ்க்கையிலை ஒரு திட்டத்தோட வாழேலாது. ஒரு காலைக் கீழை வைச்சுக்கொண்டு
ஒரு காலை மேலை தூக்கிப் பிடிச்சுக்கொண்டு ஓடுறதுக்குத் தயாரா இருக்கவேணும்.
எப்ப நாட்டைவிட்டு ஓட வெளிக்கிட்டமோ நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறம்.
ஒரு இடமும் நிரந்தரமில்லை எண்டால் எங்கை ஓடிறது?
ஆனால் துணிஞ்ச சனம் ஓடிக்கொண்டுதான் இருக்குது.

வந்த புதிசிலை குட்டிபோட்ட பூனைமாதிரி ஐரோப்பாவுக்குள்ளையே சுத்திச் சுத்தி ஓடின சனம் இப்ப கண்டம்விட்டுக் கண்டம் பாயுதுகள். எங்கையாவது நிரந்தரமாய் நிண்டிருவம் எண்டுதான்.
அப்ப, இப்ப இங்கினை கிடைக்கிறதும் இத்தனைநாளாய்க் கிடைச்சதுகளிலையும் ஒரு சந்தோஷமும் இல்லை.
புதுப்புது இடங்களுக்கு ஓடிப்போனாலாவது சந்தோஷம் வந்திடாதா எண்டு ஒரு ஆசைதான்.
சந்தோஷம் எண்டது என்னத்திலையிருந்து வருகுது எண்டு ஆருக்கும் விளங்குதில்லை.

புதிசா ஒண்டைக் கண்டா அதிலை ஆசை வருகுது. அது கையிலை கிடைச்சாச் சந்தோஷம் வரும்
எண்டமாதிரி ஒரு பிரமை. ஆனால் விரும்பினது கிடைச்ச உடனை அதிலை தெரிஞ்ச சந்தோஷமெல்லாம்
இல்லாததுமாதிரித் தெரியுது. இதைவிடப் புதிசாய் ஒண்டைக் கண்ட உடனை சந்தோஷம் அதிலை
இருக்கிறமாதிரித் தெரியுது. அதாலைதான் ஒருகாலைத் தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயத்துக்கு நிக்கிறமாதிரி நிக்கவேணும். வசதி கிடைச்சா ஓடியிரவேணும். ஆர் கண்டது ஒருவேளை போற இடத்திலை அவைக்குப்
புதுச் சந்தோஷம் வந்தாலும் வரும்.

உண்மை என்னெண்டால் இவைக்கு நாட்டுக்குப் போக விருப்பமில்லை. ஆருக்குத்தான் விருப்பம் வரும்.
அங்கை சண்டை நடக்குது நடக்கேல்லை எண்டதுகளை விடுவம். சண்டை தீர்ந்தாலும் ஆரும் போக விரும்பேல்லை. அதாலைதான் இந்தக் கண்டப் பாய்ச்சல்.
பிள்ளைகளைப் படிக்கவைக்கப் போகினமாம். கனடாவிலையும் அமெரிக்காவிலையும் தமிழ் அந்தமாதிரி வளர்ந்திருக்கெல்லே. அதால ஜெர்மன் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை விட்டிட்டு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் போகினம். நானும் போகலாம் எண்டுதான் பார்க்கிறன். இல்லாட்டில் என்ரை பிள்ளைகளின்ரை எதிர்காலமும் பழுதாப் போயிடும். எதுக்கும் பிள்ளையள் கொஞ்சம் வளரட்டும். போவம்.

இடையிலை போனகிழமை ஒரு ரெஸ்ரோரன்ட் எடுக்கிறதுக்கு அட்வான்ஸ் குடுத்திட்டன். நெடுக
இன்னொருத்தனுக்குக் கீழையே கிடந்து முறிகிறதிலை என்ன வரப்போகுது? அதாலைதான் கிடந்த காசை
வைச்சு சின்னதாய் ஒரு ரெஸ்ரோரன்ட்.
ஆனால் மறந்தும் எங்கடை ஆக்களை வேலைக்கு எடுத்திடப்படாது. எடுத்தால் கதை சரி. ஒண்டுக்குப் பத்தாய் யாழ்ப்பாணம் கோட்டல்தான்.

ஆரோ பெல்லடிக்கிற சத்தம் கேட்குது
எழுந்துபோய்க் கதவைத் திறந்தால்-
எழுத்தாளர்!

„என்னண்ணை கனகாலத்துக்குப் பிறகு..?“
„சும்மாதான் தம்பி!“
„உள்ளுக்கை வாங்கோ!“
„இல்லைத்தம்பி நான் போகவேணும்!“
சொல்லிக்கொண்டே வெளியில் நின்றபடி உள்ளே வீட்டை நோட்டம் விடுகிறார் அவர்.
„ஒருத்தரும் இல்லையண்ணை! மனிசி பிள்ளையள் வெளியிலை போயிருக்கினம்.!“
„ஒண்டுமில்லைத் தம்பி…உம்மட்டைத்தான் ஒரு அலுவலாய் வந்தனான்..!“
„சொல்லுங்கோ அண்ணை!“
„நீர் ஒரு ரெஸ்ரோரன்ற் எடுத்திருக்கிறீராம்!“
„ஓமண்ணை!“
„அதிலை..அதிலை.. எனக்கும் ஒரு வேலை போட்டுத் தாருமன்!“

அவர் இப்படிக் கேட்பாரெண்டு ஆருக்குத் தெரியும்.
„என்னண்ணை திடீரெண்டு… ? உங்கடை கதை எழுதிற வேலை என்னாச்சுது?“
„அது சும்மா பொழுதுபோக்குத்தானை தம்பி.. அதாலை என்ன வரப்போகுது..? ஆம்பிளையாப் பிறந்தவன்
ஏதாவது ஒரு வேலைவெட்டி பாக்கவேணும்!“
„அப்ப கதை எழுதிறது ஒரு வேலை இல்லையே?“
„அது என்ரை ஆத்ம திருப்திக்காக எழுதிறது தம்பி! கோயில்லை போய்ச் சாமி கும்பிடுகிறம். அது நமக்குச்
சம்பளமா தருகுது..? ஏதோ எங்கடை மனத் திருப்திக்குக் கும்பிட்டிட்டு வாறம்… அதுமாதிரித்தான் கதை எழுதுகிறதும். எங்கடை மொழிக்கு நாங்கள் ஏதேனும் செய்தமெண்ட ஒரு சந்தோஷம்!“
„ஆனால் பாருங்கோ அண்ணை.. என்ரை ரெஸ்ரோரன்டிலை உங்களுக்கு ஏற்றதாய் ஒரு வேலையும் இல்லை!“
அவர் என்னை ஒரு மாதிரிப் பார்க்கிறார்.
„சரி தம்பி நான் வேறை எங்கையாவது விசாரிக்கிறன்.!“

கதவைத் தாழிட்டுவிட்டு வந்து இருக்கையில் சாய்கிறேன்.
மனம் பெரிதாய் அந்தரப்படுகிறது.
எதைச் செய்தும் பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்..
ஆனால் ஆத்ம திருப்தியை..?
எழுத்தாளரிடம் அது நிறையவே இருக்கிறது.
அதை அவர் ஒரு வேலையாக எண்ணாதவரை!