துபாய் ஃபாத்திமா கவிதைகள் (முகநூலினால் மூச்சு கொடுப்போம்)

ஐக்கிய அரபு அமீரகமானது மத்திய கிழக்கில் தமிழ் தவழும் முக்கிய தேசம். துபாய் என பொதுவாக அறியப்படும் இங்கே தமிழ் வளர்க்கும் நம்மவர்கள் வேறுபாடின்றி ஓரமைப்பில் உலவுதல் மகிழ்வாம். அவர்களில் பாத்திமாவும் குறிப்பிடத்தகு ஒருவர். இவர் இந்தியா தமிழகத்தின் காரைக்குடியினை பூர்வீகமாகக் கொண்டவர்.

ஃபாத்திமா அரபிக் மொழி ஆசிரியையாக பணியாற்றுகிறார். அமீரகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்புக்களை நடாத்தி வருபவர். துபாய் தமிழ் 89.4 பண்பலையில் அதிகமாக வாரந்தோறும் இவரது படைப்புகள் உலவுகின்றன. பிரான்ஸ் தேசத்தின் ‚தமிழ்நெஞ்சம்‘ மின்னிதழில் மாதந்தோறும் இவரது கவிதைகள் திரு.அமீன் முகம்மது அவர்கள் மூலமாக வெளியாகி வருகின்றன. அத்தோடு பல்வேறு இணையங்கள் மற்றும் முகநூற் குழுமங்களில் தொடராக படைப்புகள் வெளியாகின்றன. சக படைப்பாளரை ஊக்குவிக்கும் மனம். உண்மையுணர்வை தெளிக்கும் குணம்.

இது துபாய் ஃபாத்திமா அவர்களின் படைப்பிலொன்று. ஊக்குவித்து உயர்த்துவோம்.

அறியாமல் போனதே!

மழைநீரை இழுக்க மறுக்கின்றன,
நிழல்களை இழந்த நிலங்கள்!

கூவிட மறுக்கின்றன
கூடுகளை இழந்த குயில்கள்!

ஆடிட மறுக்கின்றன
மழைமேகம்காணாத மயில்கள்!

விளைய மறுக்கின்றன
வெடித்த நிலத்தில் விழுந்த விதைகள்!

பேசமறந்து ஊமையாகிப்போயின கனிகளை இழந்த கிளிகள்!

மரங்களை வெட்டுவதால் இன்னும் எத்தனையோ மாற்றங்கள்!

வீழ்த்தினாலும் வீணாகமாட்டேன் என்று வாழ்ந்துதான் கொண்டிருக்கின்றன விருட்சங்கள்,

அடுப்புக்கு விறகாக,
எழுதும் கோலாக,
படுக்கைக் கட்டிலாக,
பயணிக்கக் கப்பலாக,
பறக்கும் பட்டமாக,

இன்னும் இன்னும்,

உன்னைத் தொடாமல் யார்க்கும் வாழ்வில்லை எனும் நிலையில்,

உன்னை வெட்டினால் தன்னையே அழிக்கிறோமென்று அறியாமல் போனதே?

ஃபாத்திமா,
ஷார்ஜா