நீங்காத நினைவுகள். தமிழருவி இசைவிழாப் போட்டி 1993

தமிழருவி இசைவிழாப் போட்டி 1993

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் கலை இலக்கிய கலாச்சார அரசியல் முன்னெடுப்புக்களை நோக்காகக்கொண்டு  மாத,  இருமாத  காலாண்டுச் சஞ்சிகைகள்  பல தோன்றி பொருளாதார அரக்கனுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் தம்மை முடக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் செய்திப் பத்திரிகை ஒன்றின் அவசியத்தையுணர்ந்து எசன் நகரில் ஊற்றெடுத்த தமிழருவி இன்று ஜெர்மனியில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரந்தோடி ஓராண்டை நிறைவு செய்திருப்பது பாராட்டிற்குரிய சாதனைதான்.

ஈழத்தமிழர்களிற்காக ஊற்றெடுத்த தமிழருவி ஈழத்தின் கலைஞர்களையும் மறக்காமல் தன் ஓராண்டில் கௌரவித்தது சாதனையின் இரண்டாம் படியே.

ஈழவிடுதலைக்கு இன்னுயிர் உவந்தளித்த போராளிகளை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியுடன் ஆண்டுவிழா ஆரமபமாயிற்று. மங்கள வாத்தியக் கலைஞர் கணேஸ் குழுவினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனக் கௌரவிப்புக்கள்…

பிரதம விருந்தினராக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு இரா.ந.வீரப்பன் கலந்துகொண்டார்.
பிரபல எழுத்தாளரும் பூவரசு ஆசிரியருமான திரு இந்துமகேஷ் விழாத் தலைமையேற்று சஞ்சிகைகள்,  பத்திரிகைகள் என்பனவற்றின் பணிபற்றி உரையாற்றினார்.

சிறப்புரை வழங்கிய ஈழநாடு அசிரியர் திரு குகநாதன்  தமிழருவியின் சிறப்பையும் அதன் பணியையும் மெச்சியதும் சகோதரப் பத்திரிக்கையை  சமனாக நோக்கியதும் பத்திரிகைத் துறையினருக்கு இருக்கவேண்டிய பரந்தநோக்கை வெளிப்படுத்தியது மெச்சவேண்டிய ஒன்றே.

விக்கினேஸ்வரா நடனக் கலாமன்ற நர்த்தகிகள் சிறப்பான நாட்டியக் கலையை வழங்க கமலபாதம் – தாஸ் குழுவினர் தாமும்  சளைத்தவர்கள் அல்ல எனத் தமது திறனை வெளிப்படுத்தி சபையோரின் கரகோஷங்களைப்
பெற்றுக்கொண்டனர். திரை இசை நடனங்களும் வந்துபோயின.

விழாவில் பிரதான நிகழ்ச்சியான இசைப் போட்டிக்கு இசைக்குழுக்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டன. நடுவர்களாகக் கடமையாற்றிய பார்வையாளர்களில் பெரும் பகுதியினரான எசன் நகரமக்களாகிய தமிழருவியின் வாசகர்கள் தம்மூர்க் கலைஞர்கள்  என்ற பெயரில் ஒருபக்கம் சாராது  ஆறு இசைக் குழுக்களினதும் திறனாய்ந்து பாடல்களினதும் பாடகர்களினதும் தரமாய்ந்து தீர்ப்பு வழங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

பங்குபற்றிய னைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்: தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிவரும் தமிழருவி  தமிழ் இசைக் கலைஞர்களுக்கு வழங்கியுள்ள இந்தக் கௌரவம் காலந்தோறும் நினைவு கூரத்தக்கது என்பதில் சந்தேகமில்லை.