Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 பனிவிழும் மலர் வனம் ? அத்தியாயம் 54? – stsstudio.com

பனிவிழும் மலர் வனம் ? அத்தியாயம் 54?

இந்த வியப்பில் இருந்து சங்கரின் தாயார் விடுபட அங்கு சில நிமிடங்கள் போயின… தன்னை சுதாகரித்துக்கொண்டே தொண்டையை செருமி சரிப்படுத்தியவாறு““ சங்கர் .. இவ்வளவு அன்பு மது மேலே வைச்சுக்கொண்டு எப்படி உன்னால் வேறொரு பெண்ணையும் லவ் பண்ண மனம் வந்தது.?? ஏதோ இதுக்குள் இருக்கு என்பது மட்டும் எனக்குப்புரிகிறது.. சரி எல்லாம் உங்கள் விருப்பம்.. இதற்குள் நான் ஏன் தலையிட்டு??? என்றதும் இடைமறித்த சங்கர்““ மம்ஸ் இதற்குள் எந்த முரண்பாடும் இல்லை., நாம ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்போம் மா..“ என்றபடி புத்தகங்களை காட்டினான்.. அழகான அட்டைப்படத்தோடு “ பனி விழும் மலர் வனம்“ எனும் தலைப்பில் கவிதை நூல் தயாராகிக் கிடந்தது. நூறு கவிதைகள் அடங்கிய வண்ணப்படங்களுடன் அழகான ஒரு நூல்.. பல நூறு பிரதிகள் பொதிக்குள்ளிருந்தன.. அவற்றை பலதடவை புரட்டிப் புரட்டிப்பார்த்தபடியே „“ சங்கர்.. இதைப்பார்த்தால் மதுமதி ரொம்பவே சந்தோசப்படுவாள்.. அவளின் கனவே இதுதானே..““ என சொல்லி சங்கரின் தாயார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. “ சரிம்மா“ என்றபடி மதுமதி வரும் முன்பாக , விரைவாக புத்தக்கட்டை தூக்கியபடி தன் அறைக்குள்ளே நுழைந்தான் சங்கர்.

நாட்கள் விரைவாக நகர்ந்தன. பச்சைநிறஆடை தரித்த நிலமகளை அழகுபடுத்த வண்ண மலர்கள் போட்டி போட்டுக் கொண்டு மலர்ந்து மணம் வீச, மந்தமாருதம் வந்து சாமரம் வீச, பனி விழும் தேசத்தில் வானவில்லின் நிறங்கள் திரும்பிய இடமெல்லாம்..இந்திரலோகமொன்று தரை வந்ததோ என பார்த்த கவிஞர்கள் பாக்கள் புனையாமல் நகரமாட்டார்கள். அழகானது டென்மார்க் தேசம்.. அழகிற்கு அழகு சேர்ப்பதாய் மாலைச்சூரியனும் மெல்ல அந்தி வானச்சிவப்பழகில் கிறங்கிப்போய் மெல்ல மறைந்து செல்கின்றான்…

„“அப்பாடா. கல்யாணவேலையும் அலைச்சலுமாய் எப்படித்தான் இந்த வாரம் துரிதகதியாய் ஓடிப்போனதோ தெரியலையே““என்றபடி தனது சேர்ட்டை கழட்டி கொழுவியவாறு சங்கரின் தந்தையார் சோபாவில் அங்கலாய்ப்புடன் சாய்ந்தார். விடிந்தால் கல்யாணம்.. வீடு நிறைய உறவினர்கள்.. மண்டபத்து அலுவல்களை முடித்துவிட்டு அப்போதுதான் தந்தையாரும் உறவினர்களும் வீடு திரும்பியிருந்தனர் „“ மது போய் நேரத்திற்கு படுக்கலாம்தானே…கண்கள், முகம் வீங்கி போய்விடும் நித்திரை முழித்தால்… விடியப்பறம் மேக்கப்காரி வாறத்துக்கு இடையிலை தோயணும்.. „“இது மாமியின் அன்பான அதட்டல்,
“ ஓமோம் மாமி.. “ என்று சொன்னாளேதவிர கண்களை அவளால் மூட முடியவில்லை., அவளின் மனம் நிலைதடுமாறியது…நடுங்கியது.. நாளைக்காலை திருமதி மதுமதி அனசன் ஆகப்போகின்றாள். இதுவரை காதலனாக இருந்தவன் பொழுது விடிந்தால் கணவனாக அவளை முழு உடமையாக்கப்போகிறான். வேற்று கலாச்சார வாழ்வு ஒன்றிற்குள், முற்றிலும் மாறுபட்ட பழக்கவழக்கமுள்ள குடும்பத்திற்குள் அடிஎடுத்து வைக்கும் ஈழத்தமிழிச்சிக்கு காதலிக்கும்போது இல்லாத பயம் எப்படி இங்கு வந்தது.? கட்டிலில் புரண்டாள்..இந்தச்சமயத்தில் தாய், தந்தை அருகில் இல்லாத கவலை இன்னும் பலமடங்கு வேதனையை அவளுக்கு கொடுத்தது..அதே நினைப்போடு தன்னையறியாமலே கண்ணயர்ந்துபோனாள் மதுமதி.

கதிரவனும் அழகான இந்த திருமணநிகழ்வுக்கோலத்தை காணும் ஆவலுடன் அதிகாலையிலேயே தன் மஞ்சள் முகத்தை வெளிக்காட்டி வானிலே ஊர்கோலம் போய்க்கொண்டிருந்தான். காலை 10 மணிக்கும் 11 இற்குமிடையில் சுபமுகூர்த்தநேரம்.நாதஸ்வரத்தின் ஓசை இனிமையாக செவிகளில் பரவியது. நூற்றுக்கணக்கானோர் வாழ்த்துரைக்க… கெட்டிமேளம் முழங்கியது. அனசன்- மதுமதி, சங்கர்- சந்தியா ஜோடிகள் திருமணபந்தத்தில் இணைந்தார்கள்..எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சியின் பிரவாகம்.

விருந்துபசாரத்தின் பின்னர் கல்யாணமேடை வரவேற்பு வைபகத்திற்காக மாற்றியமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இரு ஜோடிகளும் புதிதாக மாற்றிய அழகான உடையுடன் மண்டபம் நுழைந்த சமயம் அழகுமங்கையர் ஆடலுடனும் பாடலுடனும் நடத்திய வரவேற்பு கண்கொள்ளாக்காட்சியானது..

அதே மேடையில்
மதுமதி எழுதிய கவிதை நூல் “ பனி விழும் மலர் வனம்“ சங்கரினால் வெளியிடப்பட்ட நிகழ்வு அந்த நூலின் கதாசிரியையே ஆனந்த வெள்ளத்தினுள் திக்குமுக்காடவைத்தது… மதுமதி அனசன் தம்பதிகளின் கைகளில் கல்யாணப்பரிசாக நூல் கையளிக்கப்பட்டவேளை அதை ஏற்று நூலாசிரியை நிகழ்த்திய ஏற்புரை எல்லோர் மனதையும் தொட்டுச்சென்றது.

„அவையை அலங்கரிக்கும் அனைத்து தமிழ் , டெனிஷ் உறவுகளுக்கும் சிரம் தாழ்த்திய என் வணக்கம்..
என் வாழ்வில் சிறந்த பொன்னான நாள் இது…காதலித்தவரை கைப்பிடித்த இத்தருணத்தில் எனது படைப்பு என் கரத்தில் நூல் வடிவமாக எனக்கே தெரியாமலே… என் கண்களையே நம்பமுடியவில்லை.. இது நிஜமா? இல்லை கனவா? இப்படி ஒரு சந்தர்ப்பம், அனுபவம் எவருக்குமே வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன். எனது கனவை நிறைவேற்றிய சங்கருக்கு முதற்கண் என் நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.. என் காதலை சேர்த்து வைத்தவரும் சங்கரேதான்.. சங்கர் உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறனோ எனக்குத்தெரியவில்லை.. உங்களுடன் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன். கோபப்டுத்தியிருக்கிறேன்.. எல்லாவற்றையும் மன்னிக்க மாட்டாயா என்று சபையோர் முன்னிலையில் கேட்கின்றேன்.

வேற்றுகலாச்சாரம் கொண்டவரை துணைவராக அடைந்தபோதும் என் தமிழ் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்து விடாது… தொடர்ந்து எழுதுவேன்..எழுதிக்கொண்டிருப்பேன்..,இன்னும் பல நூல்கள் வெளியிடுவேன்.. இந்தச்சந்தர்ப்பத்தில் மகிழ்வோடு ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.. இந்த நூலை டெனிஷ் மொழியில். மொழிபெயர்த்து கூடிய சீக்கிரத்தில் உங்கள் கரங்களில் தருவேன்.. „“ அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.. ஆனந்த மிகுதியால் கண்கள் குளமாகின.. அனசன் அருகில் வந்து அமர்ந்தாள். அன்போடு அவள் கரங்களை எடுத்து அனசன் தன்கரங்களோடு இணைத்துக்கொண்டான்.

அங்கு எழுந்து வந்த சங்கர் “ என் அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..
நான் பால்யத்தில் இருந்து டென்மார்க்கில் வளர்ந்ததால் எனக்கு தமிழ் அறிவு போதியளவு இல்லை. எழுத வாசிக்கத்தெரியுமே தவிர அதனை ஆழமாக படித்திருக்கவில்லை.. தமிழின் மேல் எனக்கு ஆர்வம் வருவதற்கு காரணமானவள் மது. எனக்கும் மண்ணுக்கும் தூரம் இருந்தபோதும் போரினால் பெற்றோரை இழந்த ஒரு பெண்ணை வாழ்க்கைத்துணையாக்கவும் வழி தந்தவள் மது.., எல்லாமே நீயாகிறாய் மது..,மது உன்னை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்?? நீ ஏது தப்பு செய்தாய்? உன்னோடு சண்டைபோட்டதெல்லாம் ஒரு அன்பின் நிமித்தமே.. உன் கவிதைகளை வாசித்த போது நான் வானில் பறப்பதை உணர்ந்தேன்., தமிழின் சுவை அறிந்தேன். உன்னாலே தமிழை நேசிக்கிறேன்… உன் கவிதைகளை நூலாக்கி இந்த அழகு தேவதையின் கைகளில் சமர்ப்பிக்க விரும்பினேன்., அது இன்று நிறைவெய்தியது., நீயும் அனசனும் நூறாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்., இதுதான் என் ஆசை…வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு உதாரணமாக நம் வாழ்வை எடுத்துக்கொள்ளலாம்.. “ என
பேசிமுடித்த சங்கர் கண்களில் நீரோடு வந்து சந்தியா அருகில் அமர்ந்தான்.. கைதட்டல் வானைப்பிளந்தது.

விழாமுடியும் தருணம் பார்த்து வானமும் மழை பொழிந்து தன் வாழ்த்தைத் தெரிவித்தது. மணமக்களை சுமந்த கார்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்காக அவரவர் வீடுகளை வந்து அடைந்தன.
மெட்டோசை ஒலிக்க வலது காலை எடுத்து வைத்து மதுமதி அனசன் வீட்டிற்குள் புகுந்தாள். அவன் கைகளை பற்றியபடி வெட்கத்தோடு வந்தவளை வரவேற்று அன்பாக உபசரித்தனர் அனசன் பெற்றோர்..
அனசனின் கண்களில் காதலின் போதை தெளிவாக தெரிந்தது. அவளை வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். எதுவுமே அவன் பேசவில்லை.. அவளை பார்வையாலேயே அளந்தான். “ என்ன நீ புதுசா பார்க்கிறமாதிரி இன்று பார்த்துக்கொண்டு இருக்கிறாய். ? என காதருகே கிசுகிசுத்தாள். “ நீ எவ்வளவு அழகாய் இருக்காய் தெரியுமா.. ஆசையாக உனை முதல் முத்தமிட துடிக்கும் என் அதரங்களை பாராய்..என் வெண்ணிலவே “ என்றபடி அவளை தன்னோடு இழுத்து இதழ் மீது இதழ் பதிக்க முயன்றவனை தள்ளியவள்““ யாரு சொன்னாங்க? முதல் முத்தமா இது? இப்படி 3 தடவை முன்பு சொல்லிச்சொல்லியே முத்தங்கள் தந்தது மறந்து போச்சா? அனஸ் “ செல்லமாக சிணுங்கினாள். “ மது இனி இதெல்லாம் கணக்கில் எடுக்கக்கூடாது..இனி உன்னால் எண்ணவும் முடியாது“ என்றபடி அவளை தன்னோடு இறுக அணைத்தபடி முத்தம் ஒன்றை ஆசையாக பதித்தான். அணைந்தது விளக்கு..இதைப்பார்த்த நிலாமகளும் வெட்கத்தோடு கார்மேகத்தினுள் மறைந்தும் மறையாமலும் எட்டிப்பார்த்தாள்…???

(முற்றும்)❤️ரதிமோகன் 4/6/17
பனிவிழும் மலர் வனம் நிறைவெய்தியது??

குறிப்பு: //இறுதி அத்தியாயத்திற்கு படம் வரைந்து வாழையுடன் கதையின் வாசகரும் நண்பருமான முத்து., மற்றும் வணக்கம் சொல்லும் பெண்ணோடு என் தங்கை நிலா..,மிக்க நன்றி நண்பரே..??மிக்க நன்றி நிலா
அழகான ஓவியங்கள்