மறந்து போகுமா…..

மறந்து போகுமா
நம் மரணம் வரை
மறந்து தான் போகுமா
„முள்ளிவாய்க்கால்“
அது ….
வைகாசி வந்தால் மட்டும்
நினைவில் வரும்
சொல் அல்ல….
நம் வாழ்கை முடியும் வரை
ஆறாத வடுக்கள் சுமந்த
உள்ளம் உச்சரிக்கும்
நெஞ்சை அறுக்கும்
ஆறாத ரணம்
வீதி எங்கும் மரண ஓலம்
பிணந்தின்னிப் பேய்களின்
குண்டு மழையிலும்
சன்னங்களின் சாரலிலும்
ஆயிரம் ஆயிரமாய்
கருகிப் போன
எம் இனத்தின்
அவலக் குரல்
இப்போதும் கேட்கிறதே
மறந்து போகுமா
எம் மரணம் வரை!
பாலுக்கு அழுத ….
பிஞ்சுக் குழந்தை
பால் தேடி
தன் தாயின்
அறுந்து போன மார்பில்
இரத்தம் சொட்டச் சொட்ட
பசி ஆறியபின்
பாதகனின் குண்டு பட்டு
தாயின் மார்போடு
மடிந்து போனதே
அதை எப்படி மறக்கும் நெஞ்சம்!
மரணப் புதைகுழியில்
குற்றுயிரும் குறையுயிருமாய்
பாதி உயிருடன்
புதைந்து போன
புன்னகை முகங்கள் எத்தனை
பசிக்கும் வயிற்றுக்காக
ஒரு வாய்க் கஞ்சிக்கு ஏங்கி
பட்டினியில் சுருண்ட
உறவுகள் எத்தனை
கற்பிணி வயிற்றைக் கிழித்து
இரத்தம் குடித்த
காமக் கழுகுகளின்
கோரத் தாண்டவத்தில்
சிதைந்த உடலில்
ஓடிய குருதியின்
வாடை இன்னும் மாறவில்லை
மறப்போமா
„முள்ளிவாய்க்காலில்“
கருகிய கனவுகளையும்
நம் உறவுகளையும்
மறந்து தான் போகுமா….!

தனு தனுஸ்