மலரைக் கைவிட்ட காம்பு

சுடுவதில்லை நெருப்பென்று சொன்னால்
படுவதில்லை மனதினில் தவறுகள் இந்நாள்
கெடுவதில்லை நன்மைகள் என்றால்
மறுப்பதிற்கில்லை உண்மையை உன்னால்
சோகங்கள் வந்தவரை சோர்ந்தோம்
இனி வீழ்வதில்லை என்றே நிமிர்ந்தோம்
பேதைகள் என்றே பெண்ணினத்தை
எள்ளி நகையாடிய காலத்தை துறந்தோம்
வெள்ளைத் துணியில் கரும் புள்ளி
தொல்லையாய் தெரியுமே கறையினை சொல்லி
துடைத்திட தடை போடும் சமூகம்
துடைக்காதே பெண் கொண்ட துயரம்
வன்புணர்வு கொண்டோர் வாழும்
வையகம், கேளாய் பெண்ணே
தடை மீறி கற்பை கொய்தால்
தடம் மாறி தனிமையில் வீழ்ந்திடாதே
மலரைக் கைவிட்ட காம்பு
மாலையாகாது கண்ணே
கறையான மலரென்று உன்னை
இனம் காண வழி செய்திடாதே
வாழப் பிறந்தோர்கள் என்று
துணிவாய் துணிந்து நின்று
நலமாய் வாழ்ந்து காட்டு!