மலையகத்தில் நடந்தேறிய நெதர்லாந்து சுஜி ரமேஷ் அவர்களின் ‚ஆராதனை‘ நூல் வெளியீட்டு விழா.23.02.2019

ஈழத்து இலக்கியத் தூண்களின் பலத்திற்கு மலையக படைப்பாளர்களின் பங்கு மிகப்பெரிது. மலையகத்தைச் சேர்ந்த புலம்பெயர் எழுத்தாளர்கள் மலையக வாசத்தினை கமழச் செய்திட தவறுவதுமில்லை.

நெதர்லாந்து தேசத்தில் வசிக்கும் மலையக பெண் படைப்பாளர் சுஜி ரமேஷ் எழுதிய ‚ஆராதனை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 23.02.2019 சனிக்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலமைந்த கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய, செளமியமூர்த்தி தொண்டமான் கலையரங்கில் ஆரம்பமானது. நிகழ்விற்கு கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும், நுவரெலியா மாவட்ட ‚சீடா‘ செயற்திட்டப் பணிப்பாளருமான ந.பாலசுந்தரம் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக இலங்கை கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் சு.முரளிதரன் அவர்களும், இணை பிரதம அதிதியாக சுவிட்சர்லாந்து வாழ் படைப்பாளி சி.வசீகரன் அவர்களும் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வின் பங்கேற்பாளர்கள் வரவேற்பு இடம்பெற்றது.

இறைவணக்கம் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகளால் வழங்கப்பட்டது. மாணவி சுஜீவினி மங்கல நடனம் அளித்தார். வரவேற்புரையினை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி சுபவேணி வழங்கினார். தொடர்ந்து கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

தமிழ்மொழி வாழ்த்தினை ‚ஆராதனை‘ நூலாசிரியர் நெதர்லாந்து வாழ் சுஜி ரமேஷ் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து நுவரெலியா கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா.சிவலிங்கம் அவர்கள் தொடக்கவுரை அளித்தார். ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதி வ.செல்வராஜா ஆசியுரை வழங்கினார். மட்டக்களப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அருட்பிரகாசம் அவர்களின் வாழ்த்துரையினைத் தொடர்ந்து , ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.மகாலிங்கம் நூலாசிரியர் பற்றிய பகிர்வினை வழங்கினார்.

வெளியீட்டுரையினை ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ நூல்களின் ஆசிரியர் சுவிட்சர்லாந்து வாழ் படைப்பாளி சி.வசீகரன் நிகழ்த்தினார்.
மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களின் கருத்துரையினைத் தொடர்ந்து இடம்பெற்றது. நூலினை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும், நுவரெலியா மாவட்ட ‚சீடா‘ செயற்திட்டப் பணிப்பாளருமான ந.பாலசுந்தரம் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை இலங்கை கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் சு.முரளிதரன் பெற்றுக்கொண்டார்.

‚ஆராதனை‘ நூலின் ஆய்வுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கலாநிதி கலீல் முகம்மது நஜீம் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் நெதர்லாந்து சுஜி ரமேஷ் வழங்கினார்.

இடைவேளையை அடுத்து சிறப்பு நிகழ்சியாக நுவரெலியா கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு இடம்பெற்றது. நூலாசிரியரின் நண்பர்களினாலும் நூலாசிரியர் கெளரவிப்பு அளிக்கப்பட்டார்.

நிகழ்ச்சிகளை நுவரெலியா கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் இரட்ணராஜ் தொகுத்தளித்திருந்தார்.

நிகழ்ச்சி அமைப்பு: ப.பரமஜோதி, ஓய்வுநிலை ஆசிரியர் மற்றும் ஹட்டன் தொழினுட்ப நிலையம்.

மலைகளும், கலைகளும் நிறைந்த மலையக மண்ணில் நிறைந்த தமிழுறவுகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வானது இலக்கிய நூலொன்றிற்கான சமூகத்தின் பல்துறையினரின் வரவேற்பினைச் சான்றாக்கியதெனலாம்.