வீழ்வோமென்று நினைத்தாயோ

அறிவு தேடல் அவசியமென்று உணராது
குறியின்றி அவலமாய்க் குற்றங்கள் செய்து
அறிவற்ற கதைகள் அளவின்றிப் பேசி
கறியுணவு தேடிக் கணக்கின்றித் தின்று
குறிக்கோளின்றிப் பலரை அழிக்கும்
செயலைச் சிறியராகச் செய்து சீரின்றி வீழ்ந்திடோம்.
நரை கூடி முதுமை வரை
வரையின்றி நற்செயல்கள் வளர்த்து வாழ்தல்
தரையில் நாம் தரித்திடும் உயர் வரையறை
வாழ்வென வகுத்தால் விளைவினிது.
திரைமூடும் காட்சியாம் திடமற்ற பிறவியை விரைவாக்கி
உயராது வீழ்வோமென்று நினைத்தாயோ!
விளையாட்டு மனிதராய் வீழ்வோமென்று நினைக்காதே
விளைவுகள் பயனாக வினைத்தூய்மை பெருக்கி
விளைச்சல் உச்சமாய் வன்முறை அழித்து
விளைவு போராட்டமாயினும் வாழ்வை இனித்திட
விளை நீர்ப்பெருக்கி வினையை வெற்றியாக்க
சளைக்காது உயர்வோம் சாய்ந்திடோம் அறிவாய்!
வேதா. இலங்காதிலகம் (இலங்கை) டென்மார்க்.