அவள் அழகில் நனைந்தது அந்திமழை !

இருள் நிறைந்த வானம்
கரைந்து கரைந்தே தீர்கிறது 
அவள் கூந்தல் இருளுக்கு அஞ்சி !

அவள் புன்னகைக்கு
ஈடு கொடுக்க முடியாமலே
உடைந்து உடைந்து வீழ்கிறது
தோற்றுப் போன மின்னல் !

அவளில் நனைந்ததால்
ஜலதோசம் பிடித்துப் போனது
சொட்டுச் சொட்டாய் தூறும்
இந்த அடை மழைக்கு !

இடி இடித்த முழக்கமும்
அடங்கிப் போனது
அவள் கோபப் பார்வைக்குப் பயந்திருக்கும் !

அவள் பாதம் தழுவிய மண்ணில்
தேகம் புதைத்து உறைகிறதே
மோட்சம் அடைந்து விடும்
வானிலிருந்து வந்த இந்த மழைத்துளிகள் !

– வேலணையூர் ரஜிந்தன்.