இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது

பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது….அன்று
பசியோடு வயல்வரப்பில் அப்பாவுக்கு ஒத்தாசையாக
யூரியா..உரம் அள்ளிக்கொடுத்தபோது நான்
பார்பதுண்டு தார்ரோட்டை, தபால்பஸ் வருகிறதா என்று
ஏன் தெரியுமா..
அந்த பஸ்சில்தான் அம்மா வருவார்…
சும்மா வருவாரா,,,இல்லை…
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு..கையில்
தூக்குச் சட்டியில் இறால்சொதி தளும்பத் தளும்ப..
ரோட்டோர பாலமரத்தடியில் இறங்கி நிற்பார்.
பார்த்ததுமே பரவசம்…பசியோடும் ஒரு குதூகலம்…
நடைவரம்பால் ஓடி நடுரோட்டில் கால் பதித்து
அம்மாவின் சுமையின் அரைவாசி நான் எடுப்பேன்…
கைப்பெட்டி பயளையை கச்சிதமாய் எறிந்துவிட்டு..
அடுத்தபெட்டிக்காக அப்பா என்னை அழைப்பார்…
„தம்பி,மகன்“ என்று….
எனைக் காணாது திகைப்பார்…திரும்பிப்பார்ப்பார்…
சுடச்சுட சோறுகறி சுமந்து நான் வருவதையும்..
அம்மாவும் நடைவரம்பால் அழகாக பின்தொடர்வதையும்…கண்டுகொண்டு
மனசுக்குள் சிரித்திடுவார்..மதியத்தைப் பார்த்திடுவார்…
பசிபொறுக்கமாட்டான் „படிக்கிறவன்“..என்று சொல்லி…
வயல் நடுவில் ஓடுகின்ற ஆற்றிலே கைகால் முகம் கழுவி…வரச்சொல்லி
தானும் வந்து ஆற்றில் இறங்குவார்..
இருவரும் ஆற்றிலிருந்து வந்து….
வாகாக புரையின் கீழ் அமர்ந்து இருந்துகொண்டு..அம்மா
தோதாக பரிமாற ஒரு பிடிபிடிப்போம் இருவருமே…
அறுசுவை உணவென்ன…அதற்கும் மேல் என்ன…
அப்படி ஒரு ருசியை நான் இன்றுவரை ருசித்ததில்லை…
ஐரோப்பாவிலோ சரி…அமெரிக்காவிலோசரி…எந்த
ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ சரி
அம்மாவின் அந்த கட்டுச்சோற்றுக்கு இணையான உணவு..
எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை…
இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது…