உலகம் – உலகம் -இந்துமகேஷ்.

 

„மற்றவர்களுக்காக வாழத்தான் நீ பிறந்திருக்கிறாய் என்று என்னைச் சொல்கிறார்கள். அப்படியானால் மற்றவர்கள் எதற்காகப் பிறந்திருக்கிறார்கள்?“
-இப்படி ஒரு துணுக்கை எங்கோ வாசித்தேன்.
நகைச்சுவையாக எழுதப்பட்ட வரிகள் அவை.
என்றாலும் வாழ்வின் யதார்த்தமே அதுதான்.
இந்த உலகத்தில் நான் நான் என்று தனித்துப் போனவன்கூட ஏதோ ஒருவகையில்
மற்றவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சுகமாக இருந்தாலும் சுயநலமாக இருந்தாலும் அது மற்றவர்களிடமிருந்துதான் அவனுக்கு வந்தாகவேண்டியிருக்கிறது.
நான் வாழ்ந்தேன். நான் அனுபவித்தேன் என்பவன் இந்த வாழ்க்கையையும் அனுபவத்தையும் மற்றவர்களிடமிருந்துதான் கொள்முதல் செய்திருக்கிறான்.
மற்றவர்கள் இல்லாமல் இவன் ஏது?

000

என்வரையில் உலகங்கள் இரண்டுவகை.
இயற்கை என்று பெயர்கொண்ட உலகம் ஒன்று.
மனிதர்களால் உருவானது மற்றைய உலகம்.
இரண்டு உலகங்களும் எப்போது தோன்றின என்பதற்கு இன்னும் சரியான விடை இல்லை.
ஊகங்கள்மட்டுமே விடையாக நிற்கின்றன.
ஆனால் உலகம் தோன்றியது என்பதும் மனிதன் பிறந்திருக்கிறான் என்பதும் நிதர்சனம்.
ஏனெனில் இந்த உலகங்களில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இயற்கை என்னும் உலகம் சில நேரங்களில் அமைதிகாக்கிறது.
சில காலங்களில் பிரளயம் நடக்கிறது.
மனிதனின் உலகமும் இப்படித்தான்.
நன்மையும் தீமையும் மாறிமாறி ஆட்சிசெலுத்தும்போது அமைதியும் கலகமும் மனிதவாழ்வில்
நிகழ்கின்றன.
மனிதனின் உலகத்தில் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் அடிப்படை எது?
அவனது எண்ணங்கள்தாம்.
வானுயரப் பறந்து அடுத்தடுத்த மண்டலங்களை ஆராய்ச்சி செய்வதும் அவனது எண்ணங்கள்தாம்.
வானுயரப் பறந்து சகமனிதர்கள்மீது குண்டுகளைப்போட்டு அவர்களைக் கொன்றொழிக்க முனைந்து
நிற்பதும் எண்ணங்கள்தாம்.
நல்ல எண்ணங்களை உறுதி செய்து அவைகளின் வழியே தன் வாழ்வை நடாத்திச் செல்லாதவரையில்
மனிதனின் உலகம் துயரங்களிலிருந்து மீள்வதென்பது இயலாத காரியம்தான்.

000

எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் குறைசொல்வதும் மற்றவர்கள் மீதுகுற்றம் கண்டுபிடிக்க முயல்வதுமே பிழைப்பாகப் போய்விட்டது பலருக்கு.
இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதும் குறைசொல்வதும் அவர்களுக்கோ அல்லது மற்றவர்க்கோ எந்தவிதத்திலாவது பலனளிக்கிறதா என்றால் இல்லை.
இருந்தும் குற்றம் கண்டுபிடிப்பதும் குறைசொல்வதும் தொடர்கிறது.
சரி. இப்படிக் குறைசொல்பவர்களைப்பற்றியும் குற்றம் கண்டுபடிக்க முயல்பவர்களைப்பற்றியும் குற்றம் கண்டுபிடித்து குறைசொல்வதால் நமக்கும் என்ன பலன்?
அவர்கள் திருந்தப் போவதில்லை என்று தெரிகிறது.
அவர்களைப் பற்றிப்பேசிக் காலத்தை வீணடிக்காமல்
நாங்கள் திருந்துவோம்.
காலம் அவர்களைத் திருத்தட்டும்.

000

குட்டிக் கவிதைகள் எழுதுகிறார்கள் பலரும்.
அதுபோலக் குட்டிக் கதைகள் எழுதினால் என்ன?
துவேஷம் என்று ஒரு குட்டிக்கதை சொல்லவா?

துவேஷம்.

அவன் கவலையோடு வந்தான்.
„ஜேர்மன்காரங்கள் சரியான துவேஷம் பிடிச்சவங்கள் மச்சான். தந்த விசாவையும் பிடுங்கிப்போட்டு |டுல்டுங்| தந்திருக்கிறாங்கள்.ஒரு மாதத்துக்குள்ளை ஊருக்குத் திரும்பிப்போகட்டாம்.“

„அப்ப மெதுவாய் வேறை எங்கையாகிலும் மாறு…!. உன்ரை தம்பி கனடாவிலை இருக்கிறான்தானை.
அங்கை போகப் பார்!“
-ஆறுதல் சொன்னேன்.
„ஆர்…என்ரை தம்பியோ?…அந்த நாயின்ரை முகத்திலை முழிக்கிறதைவிட நான் ஊருக்கே போய்ச்
செத்துப் போறன்!“
-ஆவேசமாகக் கத்தினான் அவன்.

000
இந்த உலகத்தை ஆளவேண்டிய அன்புக்குப் பதிலாக இப்போது வெறுப்புத்தான் அதிகமாக
இந்த உலகத்தை ஆட்சிசெய்கிறது.
வெறுப்புக்குப் பலகாரணங்கள்.ஆனால் நம்மவரிடையே காரணமில்லாத வெறுப்புக்கள்.
வெறுக்க வேண்டும் என்பதற்காகவே வெறுப்பவர்கள் காரணமில்லாலே வெறுப்பதால் காரணத்தைக்
கண்டுபிடித்து அதைக் களைந்துவிட முடியாமல் போய்விடுகிறது.
மனிதமனத்தைப் பீடித்துள்ள நோய்களில் மிகக்கொடுமையான நோய் இது.
தீமையை வெறுக்கலாம். நியாயம்தான்.
ஆனால் வெறுப்பே ஒரு தீமையான குணமாகப் பற்றிக்கொண்டால்…?
இந்த வெறுப்பை எப்படி வெறுப்பது?

000

„இரண்டாயிரம் பிறக்கும்போது உலகம் அழிந்துவிடப்போகிறது என்றார்கள்.அழியவில்லையே!“
சந்தோசப்பட்டான் ஒருவன்.
“ என் உலகம் அழிந்துவிட்டது!“ என்று வேதனைப்பட்டான் இன்னொருவன்-
„இரண்டாயிரம் பிறந்தபோதுதான் என் அம்மா இறந்துபோனாள்!“
ஒரே உலகத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவர்க்குள்ளும் தனி உலகம்.

இந்துமகேஷ்