கடன் தா…கவிஞர் தயாநிதி

 

சீமையில்
வாழ்வென
பெரும் கனவில்
பொய்யான
மனிதருடன்
போலி வாழ்க்கை.

ஊருமில்லை
உறவுமில்லை
பேருமில்லை
உண்மையுமில்லை
அகதியாய்
அடிமையாய்
வாழுமிந்த நரக
வாழ்வுக்கு
முடிவுமில்லை…

சட்டைப் பையில்
சிற்றிசன் மட்டை
கெக்கட்டம் விட்டு
சிரிக்குது.ஊர் விட்டு
ஊர் வந்து பேர்
கெட்டுப் போச்சுதிங்கு.

கரப்பான்
பூச்சியை விட
கேவலமான
மதிப்பெமக்கு.
மீசையை
எடுத்ததால்
வெள்ளையனாகலாமோ…

கொள்ளை போனாலும்
கொலை விழுந்தாலும்
குழப்பம் நிகழ்ந்தாலும்
பழி முழுக்க எங்களில்…
பல்லிழிப்பு குறையவில்லை
சிற்றிசனாம்…

சீர் கெட்ட வாழ்வில்
சிரிப்பிழந்து போச்சு
சத்தியமாய் கெஞ்சுகிறேன்
சிரிப்பைக் கொஞ்சம்
கடன் தா..உன்னைப்
போல் சிரிக்க உன்
சிரிப்பைக் கடன் தா.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken