சிலோன் விஜயேந்திரன் நினைவுப் பதிவு.

நினைவுப் பதிவு
—————————————————–
சிலோன் விஜயேந்திரன்

எனக்கு 1975ல்
அறிமுகமானார்.நாங்கள் மெய்கண்டான் நிறுவனத்தில் சஞ்சிகைகள் வெளியிட்ட காலமது.
அடிக்கடி எனது அலுவலகத்துக்கு வந்து அளவளாவி செல்வது இவர் வழக்கம். அந்தக் காலங்களில் இவர் ஓரங்க நாடகங்களை எழுதி
நடித்து மேடையேற்றினார்.அந்த காலப்பகுதியில் இந்திய-இலங்கைக்
கூட்டுத்தயாரிப்பில் „பைலட் பிரேம்நாத்“ திரைப்படம் தயாரிப்பில்
இருந்தது.படப்பிடிப்பு இலங்கையில் நடந்துகொண்டு இருந்தது.இதில் நடிப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட பல நடிகர்கள் கொழும்பு வந்திருந்தார்கள். நடிகர் திலகத்தை சந்திப்பதற்காக பல ஊடகவியலார்கள் முயன்ற சமயம் அது.சிவாஜியின் பிரத்தியேக செயலார் திரு.குருமூர்த்தி அவர்கள் மூலமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.கொழும்பு ப்ரைடன் ஹோட்டலில் நடிகர்திலகம் சிவாஜி தங்கி இருந்தார்.என்னிடம் அடிக்கடி வரும்
விஜயேந்திரன் எனது அந்த முன்னேற்பாட்டில் தன்னையும் இணைத்துக்கொள்ள முடியுமா?என்று கேட்டார். எனக்கு தர்ம சங்கடமான நிலை. காரணம் இவருக்கு முன்னரே டாக்டர் இந்திரகுமார் அவர்கள் மெய்கண்டான் குரு மூலம் என்னுடன் வருவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தார்.எனது புகைப்படக்கலைஞர்
வாணி,குரு,நான் என, மூன்று பேருக்குத்தான் அனுமதி இருந்தது. டாக்டர் இந்திரகுமார்
அவர்களும் இணைவதாக இருந்தது.எப்படி விஜயேந்திரன் வருவது
சாத்தியமாகும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.இருந்தாலும்
என்ன நடந்தாலும் பரவாயில்லை.விஜயேந்திரனை என்னுடன் அழைத்துப்போவதாக முடிவு செய்தேன்,வெள்ளவத்தை
ராம கிறிஸ்ண வீதியில் உள்ள அரியரெத்தினத்தின் ப்ரைடன்
ஹோட்டல் முகப்பு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்ட நடுவில் நான், என் நண்பர்களுடன்
முண்டியடித்துக் கொண்டிருந்தேன்.அப்போது வாசலுக்கு வந்த குருமூர்த்தி குரல் கொடுத்தார். கோவிலூர் செல்வராஜன்..கலாவல்லி
என்று.முன்னேறி சென்றோம் அவர் மூன்று பேர்தான் அனுமதி ஐந்துபேர் வர்ரீங்க ..சத்தம்போட்டார்…நான், சார்..இவர்கள் நடிகர்கள் சார்…சிவாஜி சாரை பார்க்க விரும்புகிறார்கள்.எனது நண்பர்களும் கூட…ப்ளீஸ் சார் இவர்களையும் அனுமதியுங்கள் என்று கேட்டேன்
பலத்த மறுப்புக்குபின் சம்மதித்தார். ஒரு மாபெரும் நடிகனை சந்தித்து அவரை நேர்காணல் செய்யப்போகின்றேனே என்ற ஒரு பயம் ஒருபுறம் ..மேலதிகமாக
இருவர் வருகிறார்களே என்ற பயம் மறு புறம்.இருந்தாலும் நான் நினைத்தமாதிரி ஒன்றும் நடக்கவில்லை.இந்திரகுமார்,விஜயேந்திரனை அறிமுகம் செய்து வைத்தேன்…விஜயேந்திரன் ஓரங்க நாடகம் நடிப்பார் சார்..
என்று சொன்னதும்.“அப்படியா எங்கே நடி பார்ப்போம்“ என்றார். உடனே
விஜயேந்திரன் தன் அகன்ற விழிகளை உருட்டி பிரட்டி பயப்படாமல் ஒரு காட்சியை நடித்துக் காட்டினார்.. „ஏய் ..நல்லா நடிக்கிறியே“ என்றார்.பக்கத்தில் இருந்த குருமூர்த்தி கூட ரசித்தார்.அந்த நல்ல நேரம் தான்
விஜயெந்திரனுக்கு பைலட் பிரேம்நாத் படத்தில் விமானத்தில் குண்டு வைப்பது போல் ஒரு காட்சியில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் அளித்தது.
இதை விஜயேந்திரன் மறக்காமல் எப்பொழுதும் சொல்வார். ஒருமுறை என்னுடன் எனது ஊருக்கு (திருக்கோவில்) வந்த அவர்..அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதை நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
அதை தொடர்ந்து நான் இலங்கை வானொலியில் பணிபுரிந்தபோது அடிக்கடி
கலையகத்துக்கு வந்து சந்திப்பார்.பல கவிதை நூல்களை வெளியிட்டார்.கம்பதாசன் மேல் அபார விருப்பு வைத்திருந்தார்,அதனால் அவர் பாடல்களை தொகுத்து நூலாக வெளியிட்டார். நான் புலம் பெயர்ந்து வந்தபின் தொடர்பு இல்லாமல் இருந்தது.1997ல் நான் சென்னை சென்றபோது
அங்கு ஒரு இலக்கிய நிகழ்வில் அவர் என்னை சந்தித்தார்.அப்போது தனது
நிலைமை குறித்தும்,தான் முஸ்லிமாக மாறியது பற்றியும் என்னுடன் பேசினார்.தனது புத்தகங்கள் சிலவற்றை தந்தார். நான் என்னால் முடிந்த உதவியை அந்த நேரத்தில் அவருக்கு செய்தேன்.அதுதான் நான் விஜயேந்திரனை கடைசியாக சந்தித்த பொழுது.அதன் பின் 2004ல் அவர் மரணித்த செய்திதான் எனக்கு கிடைத்தது. பன்முகத் திறன் கொண்ட ஈழத்துக்
கலைஞன் அமரர் சிலோன் விஜயேந்திரன்.புதிய முகநூல் நண்பர்களுக்காக இதை மீள் பதிவு செய்துள்ளேன்.

பதிவேற்றம் கோவிலுர் செல்வராஐா