தொடுவானம் தூரம் தான்…சுதாகரன் சுதர்சன்

தொடுவானம் தூரம் தான்…

தொடும்
காலம் தொலைவில் தான்…

எட்டாமல்
நழுவும்
வலிமைகள்…

கட்டாமல்
குலையும்
கனவுகள்…
.
எட்டி சோரும்
கரங்கள்..

முட்டி கலங்கும்
கண்ணீர்…

மீட்பின்றி
ஏங்கிடும் மனம்…

விடாமல் தொடரும்..
தோல்விகள்..

„போதுமடா சாமி!“ என
மனம் தடுமாறும்…

விட்டு விடு என கால்கள்
சோரும்.

இடித்து மோதும்
தடைகளில்
இடிந்து போகும்
உறுதி!

இயலாமைகள்
இழுத்து
முயலாமை
சகதிக்குள்
முப்போதும்
மூழ்கடிக்கும்!

நொருங்கி சிதறும்
துகள்களில்..
துளி துளியாய்…
உயிரும் சொரியும்..

ஆனால்….

கார்த்திகை வந்தால்…

யாவும் இடம்
மாறும்!

மூச்சிலும் பேச்சிலும்
வீச்செறியும்!

உயிர் துறக்கும்
வேளையிலும்
உறுதியோடு
முளைத்து
வீழ்ச்சிகளை
எழுச்சிகளாக்கி
தூக்கி நிறுத்த
ஊன்றி எழுகிறது
விந்தையாய் ஒன்று!!!

உயிர் பூக்கும்
சிந்தையில்
உரம் சேர்க்கும்
மந்திர கோல்!

ஆம்!

சோர்ந்து போகும்
நம்பிக்கைகளை
சேர்த்தெடுக்கும்
மூன்றாம்
கை!

பட்டு போன
பின்னும்
வேர்கள்
துளிர் விடும்

தொலைந்து
போகும்
வாழ்வில்
தொலையாமல்
மீட்க
வலிமையை
வலிந்து பாய்ச்சும்!

எல்லாம்
இழந்த பின்னும்
வேரடி மண்ணிலிருந்து
மீண்டும்
முளைப்புகள்
நிகழும்!

இறுதி துளி
உயிருக்குள்ளும்
இறக்காமல்
மொட்டவிழ்க்கும்
வாழ்தலின்
இருப்புக்கான
நம்பிக்கைகள்!

தோல்விகளை மிதித்து
வெற்றிகளை எட்டி தொட
புதிய பயணங்கள்
நம்பிக்கையோடு தொடரும்!

மூன்றாய் கையூன்றி
நெஞ்சே எழு!

இது உயிர்ப்பின்
காலம்!

உணர்வோடு
விடுதலைக்காய்
மனமே நிமிர்ந்து விடு!