தொடுவானம்.


விழுந்த
அடிகள் தாண்டி
எழுந்திட
எத்தனை
அடிகள். என்
ஒவ்வொரு
அடிகளும்
விடியலுக்கானதாய்..
ஆனாலும்
கவ்விய இருளில்
ஔியைத் தேடி
தனியாய்
தடம் பதிக்கின்றேன்.
வரமாய்
வாய்த்த வாழ்க்கை
கனமான போதும்
சுகமாய் சுமக்க
என்னையும்
சுமக்கின்றேன்…
படித்து
வாங்கிய
பட்டங்களை
விஞ்சிய பட்டங்கள்
பெரும் பட்டியலாய்..
நீண்டாலும்
நான் மட்டும் நானாய்..
மீசை முளைத்தவர்
முன் வர மறுக்கிறார்
ஆசைக்கு மட்டும்
தேதி கேட்கின்றார்.
பூஜை முடிய
போய் விட துடிக்கின்றார்.
இணங்க மறுத்ததால்
பட்டங்கள் சூட்டுகின்றார்
விட்டிலாக்கிட
விளக்கொளி
காட்டுகின்றார்.
திமிர் என்பர்
அடங்கப்பிடாரி
தாயைத் தின்னி
என்பர் அப்பப்பா….
தொடுவானம்
தொலை தூரம்
கரையைத் தேடுமுன்
கரைந்து போகின்றேன்
துலங்கும் வரை
நான் நானாக இருப்பதால்
கலங்க மறுக்கிறேன்.

 

ரி.தயாநிதி