நீள நடக்கின்றேன்…….கவிதை – சாம் பிரதீபன் –

ஒவ்வொரு சூரிய உதயங்களும்
இன்பமாய் விடிகின்றன என்பது
விடியும்போது அருகிருப்பவனையும் பொறுத்திருக்கின்றது.
வெண்மையை நான் ரசிக்கத் தொடங்கும் போது
ரசனையைத் தவிர வெறுமைதான் இருக்கின்றது
என ஒப்பாரி சொல்லித் தொடங்கும் அவனுக்கு முன்,
என் ரசனைகளை எல்லாம்
போட்டுப் புதைத்து விட்டு
மீண்டும் பரபரப்புமிக்க,
தற்புகழ்ச்சி மட்டும் விரும்பிய,
தம்மைத் தவிர உலகம் முற்றும் தவறு என்கின்ற,
உயிரனைத்தையும் எள்ளிநகையாடித் திரிகின்ற,
தனது கோப்பையில் காறித் துப்பிவிட்டு
கோப்பை கழுவாத மற்றவனை விமர்சனம் செய்கின்ற,
யாரேனும் ஒருவனை எப்போதும் நையப்புடைக்கின்ற,
அடுத்தவன் மீது அழுத்தங்களை கொடுத்துவிட்டு
எப்போதும் சிரிப்பவன் நான் எனக் கூறித்திரிகின்ற,
அந்த அவன்.
அவன் சார்ந்த நாற்றச் சகதிக்குள்
நானும் இன்றைய பயணத்தை ஆரம்பித்து நடக்கின்றேன்
நாளைய சூரிய உதயத்தை
எப்படியும்
நான் ரசித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு.

ஆக்கம் – சாம் பிரதீபன் –