„அகதித் தமிழன் ! „

“ அகதித் தமிழன் – அன்று
அதிதித் தமிழன் இன்று
சோதித்து தமிழன் முயன்று
சாதித்தான் உலகை வென்று!“

அகதி வாழ்வின் தொடக்கம்
பாதி வழியில் பயணம் முடக்கம்
மொஸ்கோ தெருக்களில் மேனி நடுக்கம்
பாதிப் பேர் வழியிலேயே அடக்கம்

பனியுக் குள்ளேயும் கிடந்தோம்
பனி மலையையும் நடந்தே கடந்தோம்
சாவின் விளிம்பில் மிதந்தோம்
சாதித்தே நிமிர்ந்தோம்

ஊரின் தொடர்பை இளந்தோம்
உறவின் நினைவில் உருக்குலைந்தோம்
உயிரை கையில் பிடித்து
ஊசி முனையில் நடந்தோம்

பிடிங்கி எறியப்பட்ட செடியாய்
கண்டங்கள் தாண்டியும் விழுந்தோம்
வேர் வைத்தெழுந்தோம்
துண்டங்களாய் உடைந்தாலும்
தமிழால் ஒன்றிணைந்தோம்.

நம்பிக்கை நட்சத்திரமே
அச்சாணி விளக்காய்
நடுகடலிலும் தெப்பமாய் மிதந்து

பெரும் கடனையும் தென்றலாய் கலைத்து
நட்பென்று வந்து …
நட்டாற்றில் நிற்க வைத்த
நயவஞ்சகரையும் திகைக்க வைத்து
வாழ்வில் உயர் எண்ணங்கள்
உந்தித்தள்ள
திசை காட்டிடு முணர்வுடன்
திக்கெட்டும் கால் வைத்தோம்

அண்ட சராசரங்களும்
பெயர் சொல்லும்
ஆண்ட தமிழன்
அண்ட மெல்லாம் நிறைந்தா னென்று
விதைத்துவிட்ட
புதிய தலைமுறையும் – புதிய
விருட்சமாய் அடியெடுத்து
எட்டுத் திக்கும் தமிழன் புகழ் பரப்ப
சாதிக்கும் இனமாய் தமிழன் !

கல்வியில் கலைகளில்
உழைப்பில் உணர்வில் உச்சத்தை தொட்டு
நாளைய சந்ததிக்கு மிச்சத்தை ….
விதைத்தபடி திசைகாட்டியாய்
சிகரத்தை தொட்டான் !

இணுவையூர் சக்திதாசன்