இசைக்கலைஞர் யாழ் ரமணன் இல்லாத யாழ்ப்பாணம்!

யாழ்.மண்ணின் இசைக்கலைஞன் தனது வாழ்நாள் முழுவதும் கிற்றார் வாத்தியத்துடன் வாழ்ந்துவந்தவர்.
இனி அவரது கரங்கள் கிற்றார் இசையை மீட்டப்போவதில்லை!
யாழ் மண்ணில் நாம் வாழ்ந்து வந்த காலம்.
கே.எஸ்.பாலச்சந்திரன்,எம்.குருநாதன்,எம்.எஸ்.நாதன்,எம்.பாக்கியராஜா,நடா ஜெயதேவன்,மனோ,அமரர் சந்திரன்,கெங்கா,பபா,சகாதேவன்,அருள்தாஸ்,அன்ரன் டேவிட்,எஸ்.கே.ராஜென்,லோகேஸ் என நாம் எல்லோரும் அன்று அங்கம் வகித்த சுண்டுக்குழி ராஜன்ஸ் இசைக்குழுவின் பிரதான இசைக்கலைஞர் ரமணன் அவர்கள்.
புதிய பாடல் ஒன்று வெளிவந்துவிட்டால் அதன் ஆரம்ப இடை இசை என்பவற்றை துரிதமாக மீட்டிக்கொள்வார்.
சக இசைக்கலைஞர்கள் எவற்றைக்கவனிக்க வேண்டும் என்பதையெல்லாம் ரமணன் விளக்கிக்கொள்வார்.
ரமணன் அவர்களின் கிற்றார் இசைக்காகவே ராஜன்ஸ் இசைக்குழுவுக்கு பல நிகழ்ச்சிகள் வந்து சேரும்.
இலங்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளோம்.
மேடையில் கலைஞர்களை அறிமுகம் செய்யும் வேளையில் நிகழ்ச்சித்தொகுப்பு என்றதும் வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் புகழ் பெற்ற அந்த கிற்றார் இசையை எனக்காகப் பிரத்தியேகமாக இசைப்பார் அதன் பின்னரே எனது பெயரை உச்சரிப்பேன்.
மக்கள் மனங்களில் எனது பெயர் நிலைபெறுவதற்கு ரமணன் அவர்களின் ஒத்துழைப்பு என்றென்றும் எனது நினைவிற்குரியது.
எத்தனை நிகழ்ச்சிகள்?
எவ்வளவு விடயங்கள்?
கொழும்பு சென்று அங்கே அப்சராஸ் குழுவினருடனான தொடர்பு.
பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்தமை!
தங்களை யாழ்.ரமணன் ஆக்கினார் அன்பு அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.
நாட்டில் யுத்தம் ஓய்ந்ததின் பின்னர் மிகச் சிறப்பாக இசை நிகழ்ச்சிகளை நடாத்திவந்தீர்கள்..
இப்போது யாவும் நினைவலைகளாக மாறிவிட்டன!
ரமணன் நீங்கள் எம் மனங்களில் நிறைந்துள்ளீர்கள்.
இசைக்கலைஞர் யாழ் ரமணன் இல்லாத யாழ்ப்பாணம்!