எனக்கும் ஆசைதான்…

கொட்டும் மழைச் சாலையிலே;
ஒற்றைக் குடைக்குள் ஒதுங்கியபடி,
குளிர் காற்று உடலை உரசிப் போக,
இரு கரம் இணைகரமாகச் சேர்த்து
ஈருடல் ஓருயிராகக் கலந்து
உன்னோடு நடை பயில எனக்கும் ஆசைதான்…!

இதயத்தின் ரீங்கார இசையோடு,
காதல் கதைபேசிக் காற்றோடு கரைந்து
முட்டி முட்டாதபடி உடலின் நெருக்கத்தில்
விட்டு விலகாதபடி உயிரும் ஒட்டிக்கொள்ள
என்னை இழந்து உன்னில் உறைந்து
உலகை மறக்க எனக்கும் ஆசைதான்…!

இமைகளின் மடிப்பில் கொஞ்சம்…
இதழ்களின் விரிப்பில் கொஞ்சம்…
இதயத்தின் துடிப்பை நெஞ்சம் உணர்ந்து!
சுண்டு விரல் பட்ட தருணத்தில்;
மின்னல் பொறி பட்டுத்தெறிக்க…
ஏக்கத்திலே நான் தவிக்க…
எட்டு வைத்து மெல்ல நீ நடக்க…
உன்னைப் பார்த்தபடி நான் நடக்க…
வெட்கப்பட்டு நாணிச் சிரிக்கும் – அந்த
தருணம் காண எனக்கும் ஆசைதான்…!

கனவுகளில் கலந்து, புதிதாகப் பிறந்து,
கவலைகளை மறந்து, இன்பம் நுகர்ந்து,
வாலிபத்தின் காட்டுத்தீ இதயத்தில் படர்ந்து…
குளிரான தேகங்கள் காதலில் உலர்ந்து…
காலம் முழுவதும் துணையாகி உன்கூட வர
எனக்கும் ஆசைதான்…!

வேலணையூர் ரஜிந்தன்.