நாங்கள் தோற்றவர்களாகியிருக்கிறோம்

நாங்கள் தோற்றவர்களாகியிருக்கிறோம்
நாங்கள் இன்று
தோற்றவர்கள் என அடங்கிப்போகிறோம்
தோற்றவர்களிடம்
காயங்கள் இருந்தது,
தோற்றவர்களிடம் கண்ணீர் இருந்தது,
தோற்றவர்களிடம் அடக்கம் இருந்தது,
தோற்றவர்களிடத்தில்
பசி தீர்ந்துபோயிருந்தது
உண்மையில்
வெற்றியின்
பிளிறலில்
தோல்வியின் கதறல்
மௌனித்திருக்கிறது
ஆம் நாங்கள் இன்று
தோற்றவர்கள்தான்
அவர்கள் வெற்றிக்குப்
பதிலாக
எங்கள் சதைகளை அறுத்துக்
கொடுத்திருக்கிறோம்
எங்கள் குடல்களை,
எங்கள் தலைகளை,
எங்கள் வளவுகளை,
எங்கள் ஆண்மையை,
பெண்கள் அவர்தம் யோனிகளை,
அவர்களின்
வெற்றிக்காய் தாரைவார்த்திருக்கிறோம்
கண்கள் இல்லாமல்,
கால்கள் இல்லாமல்,
முலைகள் இல்லாமல்,
தலைகள் இல்லாமல்,
நாங்கள் இங்குதான் வசிக்கிறோம்
கோர யுத்தத்தின் ஊனம்
இப்போதும் சில காயங்களிலிருந்து வழிந்துகொண்டிருக்கிறது;
இன்னும் சிலர் இடுப்புக்கு
கீழ் உணர்வற்று கிடக்கிறார்கள்
இன்னும் சில சோதரிகள்
தங்களை அப்படி வன்புணரவேண்டாம் என
கனவில் கத்துகிறார்கள்
ஆனால்
பழையதை கதைக்கவேண்டாமென்று
சில புதிய தலைமுறைத்
துரோகிகள்
புனைகிறார்கள்
எட்டு ஆண்டுகளின்
பெருவெளியில்
மலர்ந்திருக்கிற தார்ச்சாலைகளில் எம் தேசத்திற்கான வசந்தம் முளைத்துவிட்டதாய் மகிழ்கிறீர்கள்,
மாவீரர் துயின்ற மணல் மேட்டின் மீது
மதுப்போத்தல்களோடு புரள்கிறீர்கள்
இதே தேசத்தில் இன்னும் வீழ்ந்துகொண்டிருக்கிற அனல் பறக்கும் கண்ணீரில்
காணாமல் போனோருக்கான
தேடல் பற்றி எரிகிறது
யாரோ சப்பிய எலும்பில்
சதை தேடும் ஈனர்கள்
மறந்துவிடச் சொல்கிறீர்கள்
மறவர் அழிவை
தமிழன் தமிழனை
பகையாய் நினைக்கும்போது
அடுத்தவனை நோவானேன்
கண்ணுக்கு முன்னே
துடித்து இறந்த லட்சம்
உயிர்களும் நியாயம் கேட்கிறார்கள்
என்ன சொல்வோம் நாம் தோற்றவர்கள் என்று வெட்கித்து நிற்பதா
எட்டு ஆண்டுகளாய் என்ன தீர்வு கண்டீர் என அவர்கள் கேட்கிறார்களே!
உங்கள் காதுகளில் கேட்கலையா..?
இறந்துபோன விலங்கின் படம் போட்டு
அனுதாபம் செலுத்தும் என் உறவுகளே!
எலும்புகள் கூட இல்லாமல் அழிந்த
எம் சாவுக்கு நியாயம் கேட்காயோ என்று அவர்கள் அழுகிறார்களே! பாருங்கள்.
வைகாசி மாதம்
நாங்கள் விழித்திருக்கவேண்டுமல்லவா…
நாங்கள் தோற்றவர்கள் ஆதலால் விழித்திருக்கவேண்டும்
எங்கோ ஒரு இடத்தில் அதிக நம்பிக்கையோடு உறங்கியதால்த்தான்
நாங்கள் தோற்றவர்கள்..
நாங்கள் தோற்றவர்கள்தான்
துரோகத்தின் முன்
நாங்கள் தோற்றவர்கள்தான்
ஆனால்
வீரத்தின் முன் எழுந்து நிற்கிறோம்
ஆண்ட இனமே ஆழுமென் யாரோ ஒருவன் எழுதிச் சென்ற தீர்க்க தரிசனம் விரைவில்
உண்மையாகும்
அதுவரையிலும்
நாங்கள் தோற்றவர்கள்தான்.
-#அனாதியன்_