விடுதலை என்பது பயம்

தேகங்களை வகையறுக்கும் வல்லமையில்
 நான் புழுவெனக் கொள்ளுங்கள்.
தீட்டுக்களின் கூப்பாடு ஒன்றில்
 இலைகளை கடித்து
 காம்புகளோடு போராடிக்கொண்டிருந்தேன்.
நீங்களே கற்பனை செய்யுங்கள்.
எப்போதும் தோற்றிடாதவெரு மாநகரம் அது.

எல்லைகள் என்பது
 மொழியிருக்கும் வரை பரந்திருந்தது.
நரிகளுக்கு மட்டும் அந்நகரில் இடமில்லை.
உடலினை கிழிப்பவர்களுக்கு
 உணர்வினை மட்டும் பிழிந்து கொடுக்கும் நிலமிருந்தது.
வீரமென்றால் பெண்கள்
 என்றதொரு வழிகாட்டலிருந்த நகரம் அது.

நிலத்தினை தங்களின் உயிரென எண்ணினார்கள்.
விடுதலைக்கான தலைவனை வழிமொழிந்தார்கள்.
துப்பாக்கியை நண்பனாக கொண்டார்கள்.
கடல் ஆகாயம் நிலம் மூன்றையும் கடந்தார்கள்.
அழுக்குகளோடு தினம் சமராடினார்கள்.
நெறிமுறை தவறாமல் சுட்டார்கள்.
தோட்டாக்களின் புனிதத்தை கற்றுக்கொண்டார்கள்.
உணவென்பதை களத்திலும் பகிர்ந்து உண்டார்கள்
 ஒற்றுமைக்கு கிடைக்கவிருக்கும் பரிசுதான் துரோகம்.
துரோகம் கண்டு துடித்தார்கள்.

கண்ணீர் வடிக்கும் பலமொன்றில்
 துப்பாக்கிகளால் தாக்கினீர்கள்.
நேச உறவுகளோடு எமக்கெதிரி ஆயினீர்கள்.
மண்ணுள் உயிரோடிருக்கும் குழந்தைகளை மிதித்தீர்கள்.
அவர்களின் வாயிற்குள் ஒடுக்குமுறையை திணித்தீர்கள்.
ஒடுக்குமுறையின் பிறப்பிடம் உங்களின் காட்டிக்கொடுப்புகள்.

உங்களின் சாசனத்தில் விடுதலை என்பது பயம்.
எங்களின் யாப்பினில் விடுதலை என்பது எதிர்பார்ப்பு.

நெடுந்தீவு தனு