அன்று_பலர்_இருந்தார்கள்


பேராசைகளற்ற பருவங்களில்….
பொறாமைகள் அற்ற வயதுகளில்….
தகுதிகளின் சக்கரவியூகம் அறியாத பொழுதுகளில்….
பலர் இருந்தார்கள்
புன்னகைகள் தெறிக்க தெறிக்க
போளை(கோலி) அடித்தபோது
கிட்டிப்புள், கப்பல்கோடு
விளையாடிய பொழுதுகளில்
பலர் இருந்தார்கள்
“கண்ணை கட்டி கோவம்
பாம்பு வந்து கொத்தும்
இரெயில் வந்து இடிக்கும்..”
என சாபம் போட்டுவிட்டு – பின்
கோவமா நேசமா என
கேட்பதற்கு பலர் இருந்தார்கள்
கல்லுகடிபட கஞ்சி காய்ச்சி
குடிப்பதற்கு
வரிசைகட்டி நிற்பதற்கு
அன்று பலர் இருந்தார்கள்
மூக்கு ஒழுக சிலர்
குண்டி தெரிய ஓட்டை கழுசானோடு சிலர்
கல்லுகளை மலையிலிருந்து
உருட்டிவிட்டதைப்போல
கலகலத்து சிரித்தபடி அன்று
பலர் இருந்தார்கள்
ஓட்டை பல்லு, ஓட்டைக் காச்சட்டை
என்று பட்டம் பெறாமல்
அன்று யாருமே இருக்கவில்லை
ஆளுக்கு ஒன்றோ பலதோ
பட்டப்பெயர்கள் சூடிக்கொண்டு
திரிந்தவர்களுக்கு முன்
இப்போதெல்லாம் உரிமையோடு
பேச முடிவதில்லை
காலம் மிகக் கொடியது
அதன் கோர முகம்
இன்று பலரை மாற்றிவிட்டது
வாழ்வின் நெடுத்த பயணங்களில்
அவரவரே பாதைகளை உருவாக்குகிறார்கள்
ஒற்றை வார்த்தைகளுக்காக
பழகிய காலங்களை மறக்கிறார்கள்
பணத்தின், பொறாமையின்,
வாலைப் பிடித்து தொங்குகிறார்கள்
காலத்திற்கு காலம்
உடைகளைப்போல
மனிதர்களையும் மாற்றுகிறார்கள்
அன்று பலர் இருந்தார்கள்
உண்மையாக…..
இன்றும் அவர்கள் இருக்கிறார்கள்
போலியாக…..
கடந்துபோன நினைவுகள்
மறக்கப்படும்போதெல்லாம்
பாம்பைப்போல
புதிய முகம் அணிகிறார்கள்
ஆம் அன்று என்னுடன் பலர்
இருந்தார்கள்
அவர்கள் அத்தனை பேரையும்
அதிகம் நேசித்தேன்
காலத்திற்கு காலம்
தோன்றி மறையும் சில விண்மீன்களைப்போல
எம்மிடம் வந்து செல்பவர்கள் ஏராளம்
இன்னும் கொஞ்சக்காலம்
மீதமுள்ள பயணமிது
யாரை கோவிக்க..?
உலகின் ஆகப்பெரும் துயர்;
அனைத்து நினைவுகளை சேமித்து
வைத்திருப்பது
#அனாதியன்-